உபியில் இந்தியா கூட்டணி வெற்றி எதிரொலி; விஐபி கலாசாரத்தை தவிர்க்க வேண்டும்: அமைச்சர்களுக்கு ஆதித்யநாத் அறிவுரை
லக்னோ: மக்களவை தேர்தலில் உபியில் உள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 43 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆளும் பாஜ கூட்டணிக்கு 36 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இது பாஜ தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உபி அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் முதல்வர் யோகி ஆதி்த்யநாத் தலைமையில் நேற்று நடந்தது. இதன்பின் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உபி அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் விஐபி கலாசாரத்தை தவிர்க்க வேண்டும்.
எச்சரிக்கையுடனும்,விழிப்புடனும் இருந்தால் நமது செயல்பாடுகள் எதுவும் விஐபி கலாசாரத்தை பிரதிபலிக்காது. அரசாங்கம் மக்களுக்கானது, பொது நலன் நமக்கு முக்கியமானது. சமூகத்தின் கடைசி கட்டத்தில் நிற்கும் நபரின் பிரச்னைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும்.ஒன்றிய அரசு, மாநில அரசின் சாதனைகளை மக்களிடம் அதிகளவில் கொண்டு செல்லப்படவேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.