Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் சிறுபான்மையினர் என்ற பாகுபாடு கிடையாது: மக்களவையில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சு

டெல்லி: இந்தியாவில் சிறுபான்மையினர் பாகுபாடாக நடத்தப்படுவது கிடையாது என்று ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்ட விவாதத்தை மக்களவையில் தொடங்கிவைத்து உரையாற்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “நமது அரசியலமைப்பு உலகின் மிகப்பெரிய அரசியலமைப்பு மட்டுமல்ல, உலகின் மிக அழகான அரசியலமைப்பும் கூட. ஆனால் இங்கே ஒரு கதை உருவாக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள கொள்கை பகுப்பாய்வு மையத்தின் கணக்கெடுப்பின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் 48% மக்கள் பாகுபாட்டிற்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள்.

பிரான்சில், முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாக பல அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தலையில் முக்காடு அல்லது பர்தா அணிந்து சென்றால் அதற்கு மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதுதான். இதன்மூலம் முஸ்லிம்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக அந்த அறிக்கைகள் கூறுகின்றன. ஸ்பெயினில் முஸ்லீம்களுக்கு எதிரான உள்நாட்டு வெறுப்பு குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இதுவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலை, வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக என்ன நடந்தது குறிப்பாக அங்கு இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். திபெத், மியான்மர், இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறை அல்லது ஏதேனும் பிரச்சினை எழுந்தால், அவர்கள் முதலில் பாதுகாப்பு கோரும் நாடு இந்தியாதான். ஆப்கானிஸ்தானில் உள்ள சீக்கியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்களின் மக்கள்தொகையின் நிலை என்ன என்பது நமக்கு தெரியும்.

அவ்வாறு இருக்க, இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று ஏன் சொல்லப்படுகிறது. நாட்டின் நன்மதிப்பை பாதிக்கும் இதுபோன்ற விஷயங்களில் கவனமாகப் பேச வேண்டும். இதை நான் எந்த ஒரு கட்சிக்காகவும் கூறவில்லை. இதை நான் நாட்டுக்காகவே சொல்கிறேன். உலகின் பிற பகுதிகளில் உள்ள சிறுபான்மையினருக்கு வாக்களிக்கும் உரிமை எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு அனைவருக்கும் சம உரிமையை இந்தியா உறுதி செய்தது. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு இல்லை. ஜனநாயகத்தில் இந்தியாவுடன் யாராலும் போட்டியிட முடியாது.” என தெரிவித்தார்.