Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

இந்தியாவிலேயே மெட்ரோ ரயில் சேவை மற்றும் பொது போக்குவரத்தின் சிறப்பான சேவைக்கு விருது: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் சிவசங்கர் வாழ்த்து

சென்னை: அரியானாவில் நடைபெற்ற 2025ம் ஆண்டிற்கான 18வது Urban Mobility India மாநாட்டில் தேசிய அளவில் கலந்து கொண்ட 17 பெருநகரங்களில் நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரமாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருது, சிறந்த பல்முனை போக்குவரத்து ஒருங்கிணைப்புடன் கூடிய மெட்ரோ ரயில் என்ற பிரிவின் கீழ், நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்து விளங்குவதற்கான விருது மற்றும் சிறந்த பயணிகள் சேவை மற்றும் திருப்தி அளிக்கும் மெட்ரோ ரயில் என்ற பிரிவின் கீழ் நகர்ப்புற போக்குவரத்துக்கான பாராட்டு சான்றிதழ் ஆகிய விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தலைமை செயலகத்தில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், போக்குவரத்து துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சென்னை-மாநகர் போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பிரபுசங்கர் ஆகியோர் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில், தினசரி 12.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் பயணிகள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா ‘விடியல் பயணம்’ திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படுவதுடன், இந்தியாவிலேயே முதன்முறையாக பள்ளி மாணவர்களுக்கு பிரத்தியேகமான சிறப்பு பேருந்து சேவையும் வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து பேருந்துகளிலும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் அறிமுகம் செய்து, தேசிய பொது போக்குவரத்து அட்டை, யுபிஐ, கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் டிஜிட்டல் கட்டண வசதியும் வழங்கப்படுகிறது. அத்துடன் ‘சென்னை ஒன்’ செயலி மூலம், பன்முக போக்குவரத்து பயணத் திட்டமிடல் மற்றும் மாநகர் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில் ஆகியவற்றிற்கு ஒரே பயணச்சீட்டு பயண வசதியும், மின்சார பேருந்துகள் சேவைகள் மூலம் வாயுக்களில் உமிழும் மாசுக்களை குறைத்து, பசுமை போக்குவரத்திற்கும் வித்திடப்படுவது குறிப்பிடத்தக்கது.