Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இந்தியாவே குறி

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்பு, அவர் எடுக்கும் அதிரடி முடிவுகளும், திட்டங்களும் இதர நாடுகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வகையில் திறன்வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கான ‘அமெரிக்க ஹெச்-1பி விசா’ கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் படி, ஹெச்-1பி விசாவிற்கான கட்டணம் 1 லட்சம் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பு படி சுமார் 88 லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

டிரம்பின் இந்த உத்தரவு இன்று (21ம் தேதி) அமலுக்கு வருகிறது. ஹெச்1பி விசா என்பது அமெரிக்க நிறுவனங்கள் சிறப்புத்துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களை தற்காலிகமாக பணியமர்த்த அனுமதிக்கும் ஒரு புலம் பெயர்ந்தோர் அல்லாத விசா ஆகும். தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் போன்ற கோட்பாடு அல்லது நிபுணத்துவம் தேவைப்படும் துறைகளில் தகுதி வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவுக்கு வரவழைக்க ஹெச்-1பி விசா உதவுகிறது.

இந்த வகையில் அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றுவதற்காக இந்த விசா வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை இதுவரை இல்லாத அளவில் டிரம்ப் உயர்த்தி இருப்பது வெளிநாட்டு தொழில்நுட்ப பணியாளர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது இந்தியர்கள் தான் என்ற தகவலும் பரவலாகியுள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் ஹெச்-1பி விசா பெறுபவர்கள் இந்தியர்கள் தான் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

உலகளவில் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தொழில்நுட்பத்துறையிலும், மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி துறையிலும் பணிபுரிகின்றனர். 2022ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை தரவுகளின் படி, 3 லட்சத்து 20 ஆயிரம் ஹெச்-1பி விசா பெறப்பட்டுள்ளது. இதில் 77 சதவீதம் இந்தியாவை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில் 3 லட்சத்து 86 ஆயிரம் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் 72 சதவீதத்திற்கும் அதிகமாக இந்தியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 5 மடங்கு அதிகரித்துள்ளது. 2024ம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ளனர். 2023ம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்ைக 26 சதவீதம் அதிகம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த வகையில் அமெரிக்க ஹெச்-1பி விசா கட்டண உயர்வு என்பது இந்தியர்களுக்கே அதிகபாதிப்பை ஏற்படுத்தும்.

ஏற்கனவே டிரம்பின் பல்வேறு அறிவிப்புகள் இந்தியாவை குறி வைப்பதாக இருந்தது. ஹெச்-1பி விசா கட்டண உயர்விலும் டிரம்பின் குறி என்பது இந்தியாவை நோக்கியே உள்ளது என்கின்றனர் சர்வதேச தொழில்நுட்ப பணியாளர்கள். இது ஒருபுறமிருக்க அமெரிக்க அரசின் கெடுபிடிகளால் இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் அணுகுமுறையை மாற்ற ஆரம்பித்துள்ளன. ஹெச்-1பி விசா சார்ந்த பயணங்களை குறைக்க ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்கள் ஹெச்-1பி விசா பெறுவதை ெபருமளவில் குறைத்துள்ளது. அதேநேரத்தில் அமெரிக்காவின் அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. டிரம்பின் குறியில் இந்தியா இருந்தாலும், அமெரிக்காவை முழுமையாக நம்பி இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் இல்லை என்பதையே இது கோடிட்டு காட்டுகிறது என்பதும் தொழில்நுட்ப மேம்பாட்டு அமைப்புகளின் கூற்று.