சென்னை: இந்தியாவின் உற்பத்தி மையமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்று விரும்புகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தொடங்கி அக்.9ம் தேதி வரை மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர்; உலகை ஈர்க்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு நடத்தும் மாநாடுதான் உலக அளவில் பேசப்படுகின்றன. அனைத்து வகையான வளர்ந்து வரும் தொழில்களை தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகையான தொழில்களிலும் தடம் பதித்து வருகிறோம். 2024-25 ஆம் ஆண்டில் 16 மில்லியன் டாலர் மின்னணு பொருட்கள் தமிழ்நாடு ஏற்றுமதி செய்துள்ளது. உற்பத்தி துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் வாகன உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 40%. இந்தியாவில் மின்னணு பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு20%. இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரேயொரு மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் 45,000 தொழிற்சாலைகளுக்கும் மேல் உள்ளன. இந்தியாவின் உற்பத்தி மையமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்று விரும்புகிறேன். இந்திய விண்வெளி துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். கோவை பாரப்பட்டியில் 360 ஏக்கரில் பாதுகாப்பு தொழில்துறை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. கோவை சூலூரில் 200 ஏக்கரில் வான்வெளி தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.