புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,498 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோடி இந்தியாவிலிருந்து தப்பி ஓடினார். கடந்த 2019ல் அவர் இங்கிலாந்தில் நாடு கடத்தல் வாரண்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்து உச்ச நீதிமன்றமும் அவரை நாடு கடத்த ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்நிலையில், லண்டன் சிறையில் இருக்கும் நீரவ் மோடி, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் மீண்டும் புலனாய்வு அமைப்புகள் விசாரணை என்ற பெயரில் தன்னை சித்ரவதை செய்வார்கள் எனக் கோரி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் வரும் நவம்பர் 23ம் தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது. அப்போது, நீரவ் மோடி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவர் மீது புதிதாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படாது, ஏற்கனவே விசாரணைகள் முடிக்கப்பட்டு விட்டதால் அவரிடம் புதிதாக எந்த விசாரணையும் நடக்காது என இந்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் மீண்டும் ஒருமுறை உத்தரவாதம் அளிக்கப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.