புதுடெல்லி: வெஸ்ட் இண்டீசுடனான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா 518 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ், 4 விக். இழப்புக்கு 140 ரன் எடுத்துள்ளது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா இமாலய வெற்றி பெற்ற நிலையில், நேற்று முன்தினம் 2வது டெஸ்ட் துவங்கியது. முதல் நாள் முடிவில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் கலக்கல் ஆட்டத்தால் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில் 2ம் நாளான நேற்று இந்தியா முதல் இன்னிங்சை மீண்டும் தொடர்ந்தது. சிறிது நேரத்தில் ஜெய்ஸ்வால் 175 ரன்னுக்கு ரன் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். இருப்பினும், சுப்மன் கில், நிதிஷ் குமார் இணை சேர்ந்து சிறப்பாக ஆடினர். நிதிஷ் 43 ரன்னிலும், துருவ் ஜுரெல் 44 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மறுமுனையில் நங்கூரமிட்டு அட்டகாசமாக ஆடிக் கொண்டிருந்த சுப்மன் கில், தனது 10வது சதத்தை விளாசினார். 134.2 ஓவரில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 518 ரன் எடுத்தபோது டிக்ளேர் செய்யப்பட்டது.
சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 129 ரன் எடுத்திருந்தார். பின், முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீசின் துவக்க வீரர்கள் ஜான் கேம்ப்பெல் 10, டகேநரைன் சந்தர்பால் 34 ரன் எடுத்து ரவீந்திர ஜடஜா பந்துகளில் வீழ்ந்தனர். குல்தீப் யாதவ் சுழலில் ஆலிக் அதனேஸ் (41) ஆட்டமிழந்தார். அவரைத் தொடரந்து, கேப்டன் ரோஸ்டன் சேஸை, ரன் கொடுக்காமல் ஜடஜோ காட் அண்ட் போல்ட் ஆக்கினார். 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து திணறிக்கொண்டிருந்தது. இந்தியா தரப்பில் ஜடேஜா 3, குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் எடுத்திருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
12 இன்னிங்சில் 5 சதம்;
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டின் 2ம் நாளில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் (23) அற்புதமாக ஆடி 196 பந்துகளில் 129 ரன் குவித்தார். இது, டெஸ்ட் போட்டிகளில், கில் விளாசிய 10வது சதம். தவிர, கேப்டன் பொறுப்பேற்று, வெறும் 12 இன்னிங்ஸ்களில் கில் அடித்துள்ள 5வது சதமாகும். இந்த பட்டியலில் இதற்கு முன், சுனில் கவாஸ்கர் கேப்டனாக, 10 இன்னிங்ஸ்களில் 5 சதம் எடுத்து முதலிடத்தில் உள்ளார். விராட் கோஹ்லிக்கு, கேப்டனாக 5 சதம் அடிக்க, 18 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது. உலகளவில், இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக், 9 இன்னிங்ஸ்கள் ஆடி 5 சதங்களை விளாசியுள்ளார். தவிர, ஒரு காலண்டர் ஆண்டில், 5 சதங்கள் விளாசிய இந்தியர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார். இதற்கு முன், 2017, 2018 ஆண்டுகளில் விராட் கோஹ்லி இந்த சாதனையை படைத்துள்ளார்.