அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு: ஜப்பான் பிரதமர் இஷிபாவை சந்தித்த பின்னர் பிரதமர் மோடி அறிவிப்பு
டோக்கியோ: அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்ய ஜப்பான் முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா, ஜப்பான் 15 வது உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று டோக்கியோ சென்றார். விமான நிலையத்தில் ஜப்பான் அமைச்சர்கள், அதிகாரிகள், ஜப்பான் வாழ் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ஜப்பானின் முன்னாள் பிரதமர்கள் யோஷிஹைட் சுகா மற்றும் புமியோ கிஷிடா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
அதை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகள் இடையே மேற்கொள்ள வேண்டிய ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் வர்த்தகம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதை தொடர்ந்து பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் இஷிபா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடி கூறுகையில்,’ மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை விரைவில் நிறைவேற்றி இன்னும் சில ஆண்டுகளில் அங்கு பயணிகள் போக்குவரத்து தொடங்கப்படும். ஏஐ, செமி கண்டக்டர் , கனிம வள துறைகளில் இணைந்து செயல்பட இருநாடுகளும் முடிவு செய்துள்ளோம். பிரதமர் இஷிபா உடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான திட்டங்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம்.
அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் ரூ. 6லட்சம் கோடி முதலீடு செய்வதை இலக்காக நிர்ணயித்துள்ளோம். இந்தியா மற்றும் ஜப்பானின் சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இணைப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். டிஜிட்டல் கூட்டாண்மை, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜப்பானிய தொழில்நுட்பமும் இந்திய திறமையும் ஒரு வெற்றிகரமான கலவை என்று நாங்கள் நம்புகிறோம். அதிவேக ரயில் கட்டமைப்பில் இணைந்துள்ள நாங்கள், அடுத்ததாக துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து, கப்பல் கட்டுமானம் போன்ற துறைகளிலும் விரைவான முன்னேற்றத்தை அடைவோம். மனிதவள பரிமாற்றத்துக்கான செயல் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் இரு தரப்பில் இருந்தும் 5 லட்சம் பேர் பரிமாற்றம் செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள்.
இதில், 50 ஆயிரம் திறமையான இந்தியர்கள் ஜப்பானின் பொருளாதாரத்துக்காக தீவிரமாக பங்களிப்பார்கள். இந்தியாவும் ஜப்பானும் சுதந்திரமான, திறந்த, அமைதியான, வளமான, விதிகள் சார்ந்த இந்தோ-பசுபிக் பிராந்தியத்துக்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளன. பயங்கரவாதம் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்து எங்களுக்கு இடையே பொதுவான கவலைகள் உள்ளன.
இரு நாடுகளின் பொதுவான நலன்கள், பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத்துறை மற்றும் புதுமை துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்’ என்றார். ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா கூறுகையில்,’ 6 ஆண்டுகளுக்கு முன்பு எனது இந்திய சுற்றுப்பயணம் மறக்க முடியாது. இந்தியாவுடன் விண்வெளித்துறையில் இணைந்து செயல்படுவோம். இந்தியாவின் வரலாற்றை பார்த்து நான் பிரமித்து போனேன்’ என்றார்.
* 13 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து இந்தியாவும், ஜப்பானும் 13 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. அதன்விவரம்:
* சந்திரனை ஆராய்வதற்காக இந்தியாவும் ஜப்பானும் இணைந்து சந்திரயான்-5 பயணத்தை செயல்படுத்த உள்ளன.
* அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீட்டு இலக்கை ஜப்பான் நிர்ணயித்துள்ளது.
* செமி கண்டக்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், தொலைத்தொடர்பு, மருந்துகள், முக்கியமான கனிமங்கள், புதிய தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் விநியோக தொடர்பு.
* அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு 50,000 திறமையான பணியாளர்கள் பறிமாற்றம்.
* டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் ஜப்பானுடன் ஒப்பந்தம்.
* ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியா மீதான திட்டங்களை ஊக்குவிப்பதற்காக ஒரு தனி ஒப்பந்தம்.
* சீன அதிபருடன் 2 முறை சந்திப்பு
ஜப்பான் பயணத்தை நிறைவு செய்துவிட்டு பிரதமர் மோடி இன்று சீனாவின் தியான்ஜின் நகருக்கு செல்கிறார். அங்கு செப். 1ஆம் தேதி வரை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின், பிரேசில் அதிபர் லூயிஸ் லூலா, இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ, பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். சீன பயணத்தின் போது அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி இரண்டு முறை தனியாக சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
* 7 ஆயிரம் கிமீ தூரத்திற்கு அதிவேக ரயில் சேவை
பிரதமர் மோடி கூறுகையில்,’ மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம் இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒரு முதன்மைத் திட்டம் ஆகும். இந்த பணி நடந்து வரும் வேளையில் எங்கள் நாட்டில் 7,000 கிலோமீட்டர் நீளமுள்ள அதிவேக ரயில் வலையமைப்பை உருவாக்குவது என்ற பெரிய லட்சியத்தை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். இந்த திட்டத்தின் பெரும்பகுதி மேக் இன் இந்தியா மூலம் செய்யப்பட வேண்டும். இந்த முயற்சியில் ஜப்பானிய நிறுவனங்கள் தீவிரமாக பங்கேற்பதை நான் வரவேற்கிறேன்.
இந்தியாவில் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 1,500 ஆக சீராக வளர்ந்துள்ளது. அதே நேரத்தில் 400 க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் ஜப்பானில் செயல்படுகின்றன. 20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஜப்பான் ஒரு முக்கிய பங்காளியாக உருவெடுத்தது. 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் கண்டுபிடிப்பு, உற்பத்தி மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் ஜப்பான் ஒரு முக்கிய பங்காளியாக இடம் பெற வேண்டும்’ என்றார்.
* போதிதர்மரின் பாரம்பரிய பொம்மை மோடிக்கு பரிசு
ஜப்பானில் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய தரும பொம்மை பரிசாக வழங்கப்பட்டது. அங்குள்ள ஷோரின்சான் தருமஜி கோவிலின் தலைமை பூசாரி ரெவ் சீஷி ஹிரோஸ், பிரதமர் மோடிக்கு இந்த தரும பொம்மையை பரிசாக வழங்கினார். ஜப்பானிய கலாச்சாரத்தில் தரும பொம்மை ஒரு மங்களகரமானதாகவும் அதிர்ஷ்ட வசீகரமாகவும் கருதப்படுகிறது. குன்மாவில் உள்ள தகாசாகி நகரம் பிரபலமான தரும பொம்மைகளின் பிறப்பிடமாகும். இந்த பொம்மை தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இந்திய துறவி போதிதர்மரின் மரபை அடிப்படையாகக் கொண்டது.
* இந்தியாவும், சீனாவும் இணைந்து பணியாற்றுவது முக்கியம்: மோடி
ஜப்பானில் பிரதமர் மோடி அளித்த பேட்டியில்,’ உலகப் பொருளாதாரத்தை ஒரு நிலைக்கு கொண்டுவர இந்தியாவும் சீனாவும் இணைந்து பணியாற்றுவது முக்கியம். கடந்த ஆண்டு கசானில் சீன அதிபரை நான் சந்தித்ததிலிருந்து, எங்கள் இருதரப்பு உறவுகளில் நிலையான மற்றும் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.