பிரிஸ்பேன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5வது டி20 போட்டி பிரிஸ்பேன் நகரில் இன்று நடக்கிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஒரு போட்டி டிரா ஆன நிலையில் கடைசியாக முடிந்த 3 போட்டிகளில் 2ல் வென்றுள்ள இந்தியா, 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், கடைசி போட்டி இன்று பிரிஸ்பேன் நகரில் நடக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக ஆஸி மண்ணில் டி20 போட்டித் தொடர்களை இழக்காத பெருமை இந்திய அணிக்கு உண்டு. அந்த பெருமையை தற்போதைய தொடரிலும் இந்திய அணி தக்க வைத்துள்ளது.
இன்றைய போட்டியில் சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் அதிரடி காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. முந்தைய போட்டியில், கணிக்க முடியாத கராரா மைதானத்தில் ஆடிய இந்திய அணி சூழ்நிலையை சிறப்பாக எதிர்கொண்டு, முதல் 3 விக்கெட்டுகள் இழக்கும் முன் 121 ரன்களை குவித்தது. அதன் பின், 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் பறிபோயின. இருப்பினும், பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு ஆஸியை, 119 ரன்களில் சுருட்டி இந்தியா வெற்றி வாகை சூடியது. கடைசி இரு போட்டிகளில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா சிறப்பாக ஆடவில்லை.
இன்றைய போட்டியில் அதை சரிக்கட்டுவார் என எதிர்பார்க்கலாம். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் தனது திறமையை அவ்வப்போது நிரூபித்து வருகிறார். வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பந்து வீச்சு மெச்சத்தக்கதாக காணப்படுகிறது. ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை, 4வது டி20 போட்டி, தரமான சுழல் பந்து வீச்சுக்கு எதிரான அவர்களின் பலவீனத்தை தோலுரித்துக் காட்டியது. அந்த அணியின் பேட்டிங் வலிமை, கேப்டன் மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட் ஆகியோரை பெரிதும் நம்பி உள்ளது. இன்றைய போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்ற முனையும். மாறாக, ஆஸி, போட்டியில் வென்று, தொடரை சமன் செய்ய போராடும். அதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்றைய போட்டி, பிற்பகல் 1.45 மணிக்கு துவங்குகிறது.
* இரு அணிகளில் களமாடும் வீரர்கள்
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணைக்கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார், சிவம் தூபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்திப் சிங், ஹர்சித் ராணா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.
* ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்லீஸ் (விக்கெட் கீப்பர்), ஜோஷ் பிலிப், மிட்செல் ஓவன், கிளென் மேக்ஸ்வெல், மேட் குனெமான், ஆடம் ஜம்பா, மஹ்லி பியர்ட்மேன், பென் துவார்சுயிஸ், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ்.

