Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் வீட்டு மனைகளின் விலை 19 சதவீதம் வரை உயர்வு

சென்னை: இந்தியாவில் வீட்டு மனைகளின் விலை 19% வரை உயர்ந்துள்ளது. இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை சராசரியாக ஏழு விழுக்காட்டிலிருந்து 19 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது என்று மனை வர்த்தக நிறுவனமான ட்ராப் டைகர் தெரிவித்துள்ளது . இந்த எட்டு நகரங்களில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, புனே, அகமதாபாத் ஆகியவை அடங்கும். இந்த விலை உயர்வு, இந்த ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டின் விலைவாசி நிலவரங்களை கடந்த ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிட்டு கணக்கிடப்பட்டுள்ளது .

தலைநகர் டெல்லியில் வீட்டுமனையின் விலை ஒரே ஆண்டில் 19 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சதுர அடி ரூ.7,479 ஆக இருந்த நிலையில், நடப்பாண்டில் இது சதுர அடிக்கு ரூ.8,900 ஆக உயர்ந்துள்ளது. முக்கிய ஐடி மையங்களான பெங்களூரு மற்றும் ஐதராபாத் நகரங்களில் வீடுகளின் விலை ஒரே ஆண்டில் இரட்டை இலக்க விகிதத்தில் அதிகரித்துள்ளது. பெங்களூருவில் விலை 15 விழுக்காடு அதிகரித்து, சதுர அடி ரூ.8,870 ஆக உள்ளது. ஐதராபாத்தில் 13 விழுக்காடு உயர்ந்து, சதுர அடி ரூ.7,750 ஆக உள்ளது. சென்னையில் வீடுகளின் விலை 9 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.6,581 ஆக இருந்த ஒரு சதுர அடியின் விலை, இந்த ஆண்டு ரூ.7,173 ஆக உயர்ந்துள்ளது.

புனேயில் 9 விழுக்காடு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் 8 விழுக்காடும், அகமதாபாத்தில் 7.9 விழுக்காடும் விலை அதிகரித்துள்ளது . வீட்டுமனை விலை உயர்வு சதவீதத்தில் குறைவாக (7 விழுக்காடு) இருந்தாலும், எட்டு நகரங்களில் இருப்பதிலேயே அதிகபட்ச வீட்டுமனை விலை மும்பையில் தான் உள்ளது. மும்பையில் கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.12,383 ஆக இருந்த ஒரு சதுர அடியின் விலை, இந்த ஆண்டு ரூ.13,250 ஆக உயர்ந்துள்ளது . சொகுசு வீடுகளுக்கான தேவை அதிகரித்திருப்பது மற்றும் அத்தியாவசிய கட்டுமானப் பொருட்கள், நிலத்திற்கான செலவுகள் அதிகரித்தது ஆகியவையே இந்த விலையேற்றத்திற்குக் காரணங்கள் என்று ட்ராப் டைகர் நிறுவனம் தெரிவித்துள்ளது.