மழை வரும்… ஆனா வராது. ‘ரெட் அலர்ட்’ , ஆரஞ்சு அலர்ட் நாளில், லேசான தூறலோடு அன்றைய பொழுது கடந்து போனதுண்டு. கனமழை பெய்யும் என்ற அறிவிக்கப்பட்ட பகுதியில், ஒரு துளி கூட விழுந்திருக்காது. இதெல்லாம், வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறி விட்டதா? தொழில் நுட்பங்கள் கைகொடுக்கவில்லையா என்ற கேள்விகளை எழுப்பியதுண்டு.
வானிலையை 100 சதவீதம் கணிக்கக்கூடிய நிலை எப்போதுமே இருந்ததில்லை. திடீரென காற்றின் போக்கு, சுழற்சி மாறலாம். கடல் வெப்பம் மாறுபடலாம். உதாரணமாக கடந்த ஆண்டு பெஞ்சல் புயலின்போது திசை சரியாக கணிக்கப்பட்டபோதும், அதன் தீவிரம் குறித்த கணிப்பு பொய்த்துப் போனது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய பாரத் முன்னறிவிப்பு முறையை இந்தியா கண்டறிந்துள்ளது.
இந்தியா விவசாயத்தை அதிகம் சார்ந்துள்ள நாடு. எனவே, வானிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. மீன்பிடித்தல், வான்வழி மற்றும் நீர் போக்குவரத்து போன்றனவற்றுக்கு வானிலை முன்னறிவிப்பு தேவைப்படுகிறது. அவசரக் காலங்களில் கூட, பேரிடர் மேலாண்மை குழுக்கள் கடுமையான வானிலை எச்சரிக்கைக்கு ஏற்ப தயாராக இருக்க வேண்டும். எனவே, துல்லியமான முன்னறிவிப்புகள் மிக அவசியமானது.
இந்தியா பல நாடுகளைப் போலவே ஒரு வானிலை முன்னறிவிப்பு முறையைப் பயன்படுத்துகிறது. முன்பு இங்கிலாந்து வானிலை ஆய்வு மைய தகவல்களையும், அமெரிக்காவின் ஜிஇஎப்எஸ் தரவுகளையும் பயன்படுத்தி கணிப்புகளை மேற்கொண்டு வந்தது. இதன்மூலம் ஒரு பகுதியில் மழை பெய்யுமா என்ற கணிப்பின் துல்லியம் 12 கிலோ மீட்டர் முதல் 25 கிலோ மீட்டர் வரையிலான சுற்றளவுக்கானதாக இருக்கும்.
ஆனால் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த, புனேயில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம், பாரத் வானிலை முன்னறிவிப்பு அமைப்பை (பிஎஸ்எப்) உருவாக்கியுள்ளது. இது இந்தியாவின் புதிய, உயர் தெளிவுத் திறன் கொண்ட வானிலை முன்னறிவிப்பு மாதிரி. 2025 மே மாதம் 25ம் தேதி தொடங்கப்பட்டது. புனேயில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் தற்போது இதுதான் மிகவும் துல்லியமான உயரிய தொழில்நுட்பமாகும். சூறாவளிகள், கனமழை மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகள் தொடர்பான முன்னறிவிப்புகளின் துல்லியத்தன்மையை மேம்படுத்துவது இந்த பிஎப்எஸ்சின் நோக்கம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த பிஎப்எஸ்- 6கிமீக்கு 6 கிமீ சுற்றுளவுக்கு முன்னறிவிப்புகளை துல்லியமாக வழங்கும். சூறாவளிகள், கனமழை மற்றும் பருவமழை வடிவங்களில் மாறுபாடு உள்ளிட்ட உள்ளூர் தொடர்பான தீவிர வானிலை நிலைகளின் மிகவும் துல்லியமான கணிப்புகளை தெரிவிக்கும்.
பிஎப்எஸ் என்பது ஒரு முக்கோண கன சதுர எண்முக மாதிரியை பயன்படுத்துகிறது. மேலும் இந்தியாவின் உயர் செயல்திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டரால் இயக்கப்படுகிறது. கிராமங்களில் ஊராட்சி அளவில் மழை எங்கு பெய்யும், வெப்பநிலை எப்படி இருக்கும், காற்று மற்றும் ஈரப்பதம் என்பன போன்ற 5 நாட்களுக்கான முன்னறிவிப்புகளை இந்த பாரத் முன்னறிவிப்பு முறை மூலம் மிக துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.
குறிப்பாக விவசாயிகள் நடவு, நீர்ப்பாசனம், அறுவடை, தானியங்களை உலர்த்துதல், பதப்படுத்துதல் உள்ளிட்டவற்றை திட்டமிட இது பெரிய அளவில் உதவும் . இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த முன்னறிவிப்பு தொழில் நுட்பம் மூலம் மழை முன்னறிவிப்பு துல்லியமானது முன்பை விட 30 சதவீதம் மேம்பட்டதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது சுமார் 6 கிலோ மீட்டர் பரப்பளவு வரை துல்லியமாக மழை பெய்யும் பகுதியை கணிக்க இது உதவும்.
காற்றழுத்த தாழ்வு, கன மழை மற்றும் பருவநிலை மாறுபாட்டிற்கான முன்னறிக்கைகளின் துல்லியத்தை இது மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மாவட்ட அளவில் மட்டுமின்றி கிராம அளவிலும் துல்லியமான கணிப்புகளை வெளியிட முடியும் என்கின்றனர். இந்த புதிய உலகமே வியக்கும் வகையிலான தொழில்நுட்பம், இந்தியாவை புதிய உயர்த்துக்கு இட்டுச் சென்றுள்ளது. எனவே, இனி, வானிலை ஆய்வு மையம் ஒரு பகுதியில் மழை பெய்யும் என்று சொன்னால் கண்டிப்பாகப் பெய்யும் என எதிர்பார்க்கலாம்.
* சிறப்புகள்
பாரத் முன்னறிவு அறிவிப்பு முறையில் கணிக்க அர்க்கா சூப்பர் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படுகிறது.
* சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் 4 மணி நேரத்திலேயே கணிப்புகளை வெளியிட முடியும். முந்தைய தொழில்நுட்பத்தின்படி, கணிப்புகள் வெளியிட 10 மணி நேரம் ஆகும்.
* 6 கி.மீ.க்கு 6 கி.மீ பரப்பளவுக்கு துல்லியமான கணிப்புகளை வெளியிடலாம் (முன்பு இருந்த பிரத்யூஷ் முறையில் 12 கி.மீக்கு, 12 கி.மீ என இருந்தது)
* கிராம பஞ்சாயத்து அளவில் துல்லியமான கணிப்புகளை 5 நாள் முன்பே வெளியிட முடியும்.
* அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் உள்ள முன்னறிவு அறிவிப்பு முறைகளில் கணிப்பு பரப்பளவு 9 கி.மீ முதல் 12 கி.மீ வரை உள்ளது. இதன்மூலம், உலக அளவில் மிகச்சிறந்த நடைமுறையை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கி அசத்தியுள்ளனர்.
* தற்போது 40 டாப்ளர் ரேடார்கள் உள்ளன. இதனை 100 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
* டாப்ளர் ரேடார்கள்
டி.டபிள்யூ.ஆர் என அழைக்கப்படும் டாப்ளர் ரேடார்கள் மழையை கண்காணிக்கவும், 3 மணி நேரம் வரையில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்கவும் பயன்படுகின்றன. கடந்த 2023ல் 39 டாப்ளர் ரேடார்கள் சமவெளிகளில் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ஆனால் மலை மற்றும் கடலோரப்பகுதிகளுக்கு அதிக ரேடார்களை தேவை. இந்நிலையில், 2026ம் ஆண்டுக்குள் மேலும் 87 மையங்களில் மேற்கண்ட ரேடார்கள் நிறுவ அரசு திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், புவி அறிவியல் துறை அறிவித்துள்ளது.
இந்த டாப்ளர் ரேடார்களின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதன் மூலம், வானிலை முன்னறிவிப்புகளில் துல்லியமான தரவுகளை மேம்படுத்த முடியும். ஒரு சூறாவளி காற்று கடற்கரையில் இருந்து 200 கிமீ வரம்புக்குள் வரும்போது டாப்ளர் ரேடார்கள் அதை கண்காணிக்கத்தொடங்கும். குறிப்பாக 3 முதல் 5 நாட்கள் வரை மற்றும் 24 மணி நேர கணிப்பில் இந்த ரேடார்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம் இந்த வகையா 148 டாப்ளர் ரேடார்களை பயன்படுத்துகிறது. இந்திய ராணுவம் மற்றும் விமானப் படையும் விமானங்கள், காற்றில் உள்ள பிற பொருள்களை கண்டறிய டாப்ளர் ரேடார்களை பயன்படுத்தியுள்ளன.
* கடந்து வந்த பாதை...
அயர்லாந்தில் 1845-1852 ஆண்டுகளுக்கிடையே ஏற்பட்ட பெரும் பஞ்சத்துக்குப் பிறகு, 1877ல் அப்போதைய பிரிட்டிஷ் அரசு பருவமழையை முன்கூட்டியே கணிப்பது குறித்த முயற்சிகளில் ஈடுபட்டது.
* 1920களில் இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரலாக இருந்த கில்பர்ட் வாக்கர், கணித முறையில் பருவமழையைக் கணிப்பதற்கான வழிமுறையை கண்டறிந்தார்.
* அதன்பிறகும் பல கணிப்புகள் பொய்யாகின. இதையடுத்து, மழைக் கணிப்பை நவீனப்படுத்தும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வந்தன.
* 2002 மற்றும் 2004ம் ஆண்டுகளில் கணிப்புகள் பொய்யானதால், புள்ளிவிவரத் தொகுப்பு அடிப்படையில் கணிக்கும் புதிய முறை 2007ல் அறிமுகமானது. இது 1988 - 2006 ஆண்டுகளில் இருந்த கணிப்பு முறையை விட மேம்பட்டதாக இருந்தது.
* 2008 முதல் 2023 வரை மழை கணிப்புகள் தவறுவது சராசரி விகிதமான 10 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 7.6 சதவீதமாகக் குறைந்தது.
* மேற்கண்ட காலக்கட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய கணிப்புகளில் தவறு 5 சதவீதத்துக்கும் குறைவுதான்.
* 2021ம் ஆண்டு ஏப்ரலில் இந்தியாவில் மழை பெய்யும் இடங்கள் பற்றிய சாத்தியத்துக்கு ஏற்ற காலநிலை கணிப்புகளை உருவாக்க பல முன்னறிவிப்பு கணிப்புகளை அறிமுகம் செய்தது.
* பழந்தமிழர் கணிப்பு முறைகள்
பருவமழை உள்பட இயற்கையின் போக்கை நுண்ணியமாக ஆராய்ந்து, பலரும் வியக்கும் வண்ணம் திறம்பட வாழ்ந்தவர்கள் தமிழர்கள். வானியல் அறிவு கொண்டவர்களாக அவர்கள் திகழ்ந்தனர். அவர்கள் மழை வருவதை கணிக்க பயன்படுத்தியதாகக் கூறப்படும் சில வழிமுறைகள்.
* எறும்பு முட்டை கொண்டு திட்டையேறின் மழை பெய்தது என்பது- எறும்பு தனது முட்டைகளை எடுத்துக் கொண்டு உயரமான இடங்களுக்கு கொண்டு சென்றால் மழை பெய்யும் என்று
கூறப்பட்டது.
* வெள்ளிக் கோள் தென்திசையில் இருந்தால் மழை பொழியாது. சனி கோள் புகைகளாடு இருந்தால் மழை பொழியாது என்று பழந்தமிழர் கணித்ததை ‘அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்’ (புறநானூறு), ‘கைம்மீன் புகையினும் தூமந் தோன்றினும் தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்’ (புறநானூறு) என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன.
* அதாவது வெள்ளிக் கோள் வடக்கு நோக்கி நகர்ந்தால் மழை அதிகமாகவும், தெற்கு நோக்கி நகர்ந்தால் மழை குறைவாகவும் இருக்கும் என நம்பினர்.
* பறவைகள், விலங்குகளின் செயல்பாடுகள், மரங்களின் இலைகள் மற்றும் பூக்களை வைத்தும் மழையை கணித்தனர் என கூறப்படுகிறது.
* எதிர்காலத்தில் என்ன எதிர்பார்க்கலாம்
துல்லியம்: இனிவரும் காலங்களில் வானிலை முன்னறிவிப்புகள் மிகவும் துல்லியமாக இருக்க முடியும். மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த உதவும்.
* தரவுகள்: தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, வானிலை, செயற்கைக்கோள்களுடன் ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணிப்பு மையங்களில் தரவுகளை சேகரிக்கும் முறையும் மேம்படுத்தப்படும்.
* கால நிலை மாற்றம்: காலநிலை மாற்றம் குறித்த புரிதலை மேலும் சிறப்பாக்கும் வகையில் ஏஐ பயன்பாடு உதவியாக இருக்கும். சூறாவளிகள், அதிக வெப்பநிலை மற்றும் கனமழை போன்ற இயற்கை பேரழிவுகளைக் கண்டறிய இது பெரும் பங்களிக்கும்.
* முன்கூட்டிய துல்லியமான கணிப்புகள் மட்டுமின்றி, நிகழ்நேர தரவுகளை சேகரிக்கவும், நம்பகமான புள்ளி விவரங்களை அளிக்கவும் முடியும்.
* விவசாயம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியில் நிலையான நடைமுறைகளை பிஎப்எஸ் மூலம் செயல்படுத்த ஏதுவாகும்.
* புதிய தொழில்நுட்பத்தால் யாருக்கு என்ன பலன்?
விவசாயிகள்: காலநிலை பற்றிய முன்கூட்டிய கணிப்புகள் உரிய நேரத்தில் பயிர் செய்யவும், சேதத்தில் இருந்து பயிர்களைக் காப்பாற்றவும் விவசாயிகளுக்கு உதவுகிறது.
* பேரிடர் மேலாண்மை குழு: எதிர்பாராத பேரிடர் ஏற்படுவதற்கு முன்பே, மீட்புப் பணிகளுக்கு ஆயத்தமாவது, பாதிப்பு அதிகம் ஏற்படும் என கணிக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்களை மீட்டு உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு உதவுகிறது.
* கப்பல், விமான சேவைகள்: விமான போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும், கணிப்பை பொருத்து சேவைகளை ரத்து செய்யவும், மாற்று ஏற்பாடுகளுக்கும் உதவும். கடல் போக்குவரத்திலும் வானிலை கணிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
* அரசு: விவசாயம் தொடர்பான கொள்கைகள், திட்டங்களை கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு அரசு வகுக்க முடியும். கால நிலை மாறுதல் அடிப்படையில் எடுக்கப்படும் அரசின் முடிவுகள் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையலாம். மேலும், இத்ததைய முன்னறிவிப்புகளுக்கு ஏற்ற செயலியையும் உருவாக்கலாம்.