Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு!

விவசாயத்தை இந்தியாவின் முதுகெலும்பு என்றார் மகாத்மா காந்தி. ஆம், நாட்டின் மொத்த மக்கள் தொகையின் பெரும்பகுதியினருக்கு விவசாயம்தான் வாழ்வாதாரம். விவசாயத்தில் ஆண்களைப்போலவே பெண்களின் பங்களிப்பும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அவர்களது பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தபோதிலும் அவர்களது அங்கீகாரத்தைத் தடுக்கும் பல சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ளும் சூழலே இன்றளவும் நிலவுகிறது.விவசாய உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்கள் தங்களது ஆழமான பங்களிப்பை தவறாமல் செய்து வருகின்றனர். விதைத்தல், களை எடுத்தல், அறுவடை செய்தல் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகள் என அனைத்துத் தளத்திலும் பெண்களின் உழைப்பு கலந்திருக்கிறது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆய்வு அறிக்கையின்படி இந்தியாவின் விவசாயத் தொழிலாளர்களில் 33 விழுக்காடு பெண்களின் பங்களிப்பு உள்ளதாக குறிப்பிடுகிறது. சில மாநிலங்களில் இந்த சதவீதம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பெண்களின் பங்களிப்பு 40 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. கூடுதலாக கிராமப்புறங்களில் விவசாயப் பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்கும் கால்நடைகளை நிர்வகிப்பதிலும் அவர்கள் சிறந்து

விளங்குகின்றனர்.

உழைப்பைத் தாண்டி விவசாய தொழிலதிபர்களாகவும் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். பல பெண்கள் இயற்கை விவசாயம், உணவு பதப்படுத்துதல், மலர் சாகுபடி போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இவை அவர்களின் சொந்த வாழ்க்கையை மாற்றுவது மட்டுமின்றி, கிராமப்புற வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. உதாரணமாக சுயதொழில் பெண்கள் சங்கம் போன்ற பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள் அவர்களை ஊக்குவிக்கின்றன. தமிழகத்தில் இயற்கை வேளாண்மையை செயல்படுத்துவதில் பெண்கள் முன்னிலை வகிக்கிறார்கள். இது அவர்களின் தலைமைப் பண்பையும் வளர்த்திருக்கிறது. விவசாயத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பெண்களின் பங்களிப்பு இருப்பினும், அவர்களுக்கான அங்கீகாரத்தை எட்டிப் பிடிப்பதில் சவால்களே நிலவுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் நிலவுடமை என்பது ஆண்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. பெண்கள் பெரும்பாலும் எந்த விதமான சட்ட உரிமைகளும் இல்லாமல் நிலத்தில் வேலை செய்கிறார்கள். கடன் மற்றும் பிற நிதி தேவைகளுக்காக அவர்கள் எந்த அமைப்பையும் எளிதில் அணுக முடிவதில்லை. ஏனெனில் நிலம் பிணயமாக இங்கு பயன்படுத்தப்படுவதால் இந்நிலை நீடித்து வருகிறது. மேலும் தரமான விதைகள், உரங்கள் மற்றும் விவசாய இடுபொருட்களை வாங்குவதிலும் அவர்கள் பின்னடைவைச் சந்திக்கிறார்கள். சமூகம் மற்றும் கலாச்சார விதிமுறைகளும் பெண்களின் நடமாட்டம், முடிவெடுக்கும் ஆற்றல் போன்றவற்றைக் கட்டுப் படுத்துவதாகவே உள்ளது. விவசாய நடைமுறைகளை விட வீட்டுப் பொறுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்கள் முடக்கப்படுகின்றனர்.

விவசாய நடைமுறைகள், உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான விவசாய விரிவாக்கப் பணிகள் மற்றும் பயிற்சித் திட்டங்களில் இருந்து பெண்கள் பெரும்பாலும் ஒதுக்கப்பட்டே வருகின்றனர். இத்திட்டங்கள் பொதுவாக ஆண் விவசாயிகளை மையமாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. விவசாய வேலைகள் உடல் உழைப்பு மற்றும் அபாயகரமானதாக இருக்கின்றன. பெண்கள் பெரும்பாலும் நீண்ட நேரம் உடல் உழைப்பில் ஈடுபடுகிறார்கள். இது தசைக் கூட்டுக் கோளாறு போன்ற உடல் நலப் பிரச்னைகளுக்கு வழி வகுக்கிறது. பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற இதர ரசாயனங்களின் பயன்பாடு அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. இவ்வாறான சவால்கள் இருந்தாலும் பெண்களுக்கான சுகாதாரம், சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பது வெகு குறைவாகவே இருக்கிறது.

பெண்கள் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் அவர்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அண்மைக்காலமாக செயல்படுத்தி வருகின்றன. ‘‘பிரதான் மந்திரி கிரீஸ் சின்ஜாய் யோஜனா” திட்டம் பெண்களுக்கான நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான முன்னுரிமையை அளிக்கிறது. நீர் மேலாண்மை மற்றும் முடிவு எடுக்கும் அதிகாரத்தை அது அவர்களுக்கு வழங்குகிறது. விவசாயத்தில் பெண்களின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் ஏராளமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. சேவா மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை போன்றவை விவசாயத்தில் பெண்களின் தலைமையை ஊக்குவிப்பதில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு விவசாய சங்கங்கள் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய தளமாக திகழ்கின்றன. இவை பெண்களுக்கு விவசாயக் கடன், பயிற்சி மற்றும் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன.

பெண்கள் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பு என்று சொன்னாலும் அது மிகையாகாது. உணவு பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியே வருகிறார்கள். அவர்களுக்கான அங்கீகாரம், முடிவு எடுக்கும் அதிகாரம், தலைமைத்துவம் போன்றவற்றை வளர்த்தெடுக்க அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை என பலதரப்பும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். விவசாயத்தில் பெண்களுக்கான அதிகாரம், பாலின சமத்துவம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும்போது இந்தியா தனது கிராமப்புற மக்களின் உணவுத்தேவை, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவு ஆகியவற்றை விரைந்து எட்ட முடியும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.