Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸியை அட்டகாசமாக வீழ்த்தி பைனலில் நுழைந்தது இந்தியா

மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஜெமிமா ரோட்ரிகஸ் அபார சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் 2வது அரையிறுதிப்போட்டியில் நேற்று இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. நவி மும்பையில் நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய கேப்டன் அலைசா ஹிலி 5 ரன்னில் கிராந்தி கவுத் பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த எலிசா பெர்ரி, போபே லிச்பீல்டுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி ரன்களை ஜெட் வேகத்தில் உயர்த்தினர். குறிப்பாக போபே லிச்பீல்ட் ஆட்டத்தில் அனல் பறந்ததுடன் சதமடித்தும் அசத்தினார். இவர் 93 பந்துகளில் 119 ரன்கள் குவித்தார். எலிசா பெர்ரி 77 ரன், கார்டனர் 63 ரன்னில் அவுட் ஆகினர்.

49.5 ஓவரில் ஆஸி. அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சாரனி, தீப்தி சர்மா தலா 2 விக்கெட், கிராந்தி கவுத், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ் தலா 1 விக்கெட் எடுத்தனர். 339 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 10 ரன்னில் ஆட்டமிழந்தார். நட்சத்திர வீராங்கனை மந்தனா 24 ரன்னில் விக்கெட் கீப்பர் ஹீலேயின் அபார கேட்சில் ஆட்டமிழந்தார். ஆனாலும் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ஜோடி அட்டகாசமாக ஆடியது. ஆரம்பத்தில் பொறுமையாக ஆடிய ஹர்மன்பிரீத் பின்னர் அதிரடியை காட்டினார். இவர்கள் இந்திய அணியின் வெற்றியை பிரகாசமாக்கினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 167 ரன் சேர்த்த நிலையில் ஹர்மன்பிரீத் 89 ரன்னில் (88 பந்து) ஆட்டமிழந்தார்.

ஆனாலும் மறுமுனையில் அற்புதமாக ஆடிய ஜெமிமா 115 பந்தில் சதம் அடித்து கலக்கினார். இவருக்கு தீப்தி சர்மா (24 ரன், 17 பந்து), ரிச்சா கோஷ் (26 ரன், 16 பந்து) நல்ல ஒத்துழைப்பு தந்து பொறுப்புடன் ஆட இந்திய அணி இமாலய இலக்கை வசப்படுத்தியது. இந்திய அணி 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் அசத்திய ஜெமிமா 134 பந்தில் 127 ரன்கள் (14 பவுண்டரி) எடுத்தார். அமன்ஜோத் கவுர் 8 பந்தில் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் 2ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன.

லீக் போட்டியில் எதிலும் தோல்வி அடையாமல் அரையிறுதிக்குள் நுழைந்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை நடையை கட்ட வைத்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகளுக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிகின்றன.

ரன் சேசிங்கில் புதிய வரலாறு

நடப்பு தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி 330 ரன் எடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 331 ரன் எடுத்து வென்றது. இதுவே உலக கோப்பையில் அதிக ரன் சேஸ் சாதனையாக இருந்தது. இதற்கு பழிக்கு பழியாக நேற்று ஆஸியை வென்றதுடன், 338 ரன் இலக்கு எட்டி ஆஸியின் ரன் சேஸ் சாதனையையும் இந்திய வீராங்கனைகள் தகர்த்து புதிய சாதனை படைத்தனர்.