பாவ்நகர்: ‘இந்தியாவின் மிகப்பெரிய எதிரியே, மற்ற நாடுகளை சார்ந்திருப்பதுதான்’ என குஜராத்தில் பிரதமர் மோடி பேசி உள்ளார். குஜராத்தின் பாவ் நகரில் நேற்று ரூ.34,200 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: உலகளாவிய சகோதரத்துவ உணர்வோடு இந்தியா முன்னேறி வருகிறது, இன்று உலகில் இந்தியாவுக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை.
ஆனால் உண்மையில் நம்முடைய மிகப்பெரிய எதிரி, மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இந்த சார்பு நிலையை நாம் கூட்டாக தோற்கடிக்க வேண்டும். அதிக வெளிநாட்டு சார்பு அதிக தேசிய தோல்விக்கு வழிவகுக்கும். 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை அந்நிய சக்திகளிடம் விட்டுவிட முடியாது. நாட்டின் வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை, அந்நிய சார்புநிலையின் அடிப்படையில் வைத்திருக்க முடியாது.
வரவிருக்கும் தலைமுறைகளின் எதிர்காலத்தை மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு மற்றவர்களைச் சார்ந்திருந்தால், அது தேசிய சுயமரியாதையை சமரசம் செய்வதாகும். 100 வகையான வலிகளுக்கு ஒரே தீர்வு உண்டு என பிரபலமான பழமொழியில் சொல்வார்கள். அது போல, இந்தியாவின் அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது.
அதுதான் ஆத்மநிர்பார் (சுயசார்பு). உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சுயசார்புடையதாக மாற வேண்டும். செமி கண்டக்டர்கள் முதல் கப்பல்கள் வரையிலும் அனைத்தையும் நாம் இந்தியாவில் தயாரிக்க வேண்டும். உள்நாட்டு துறைமுகங்கள் உலகளாவிய கடல்சார் மையமாக மாறுவது இந்தியாவின் எழுச்சிக்கு முதுகெலும்பாகும். இவ்வாறு அவர் பேசினார்.