Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2 மடங்கு அதிகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2 மடங்கு அதிகம். எனவே விஜய் இதுகுறித்து தெரிந்து பரப்புரை செய்ய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.  சென்னை, எலியட்ஸ் கடற்கரையில் ‘உலக தற்கொலை தடுப்பு வாரம்’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். பொதுமக்களுக்கு பிரசுரம் விநியோகித்து, விழிப்புணர்வு பதாகை ஏந்தி மனித சங்கிலி நிகழ்வு நடந்தது.

தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் சானி பவுடர் மூலம் தற்கொலை என்பது பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் எலி மருந்து (Rat Poison) என்று சொல்லக்கூடிய எலி மருந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அதனை விற்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்து நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்கொலைகளின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் குறைந்திருக்கிறது.

திமுக வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றவில்லை என்று விஜய் சொல்வது மக்கள் மனதில் எப்போதும் நிலைக்காது என்பது அவருக்கே தெரியும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அவர் சொல்லி இந்த திட்டம் செயல்படுத்தவில்லை. இன்றைக்கு 1.15 கோடி தாய்மார்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு பயன்பெற்று வருகிறார்கள். தினந்தோறும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர்கள் விடியல் பயணம் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் என்கின்ற திட்டத்திலும், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் எனும் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உயர்கல்வி செல்பவர்களின் எண்ணிக்கை 29 சதவீதமாக ஆக உயர்ந்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 53 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

விஜய் போன்றவர்கள் எல்லாம் இதையெல்லாம் மறக்க கூடாது. இந்தியா முழுமைக்கும் பொருளாதார வளர்ச்சி என்பது 6.5 சதவீதம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது 11.19 சதவீதம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2 மடங்கு அதிகம். விஜய் போன்றவர்கள் இதுகுறித்து படித்து தெரிந்து பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.