இந்தியாவுடான மோதலில் பாக்.கின் ராணுவம் வெற்றி அமெரிக்காவின் அறிக்கைக்கு பிரதமர் ஆட்சேபனை தெரிவிப்பாரா? காங்கிரஸ் கேள்வி
புதுடெல்லி: நான்கு நாள் நடந்த மோதலில் இந்தியா மீது பாகிஸ்தானின் ராணுவ வெற்றி குறித்து அமெரிக்க ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து பிரதமர் மோடி ஆட்சேபனை தெரிவிப்பாரா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. அமெரிக்க- சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையம் தனது ஆண்டு அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இணைந்து அமைத்த அமெரிக்க- சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையம் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 2025ம் ஆண்டுக்கான அறிக்கையானது சுமார் 800 பக்கங்களை கொண்டது.
இதில் பக்கம் 108 மற்றும் 109ல் உள்ள பிரிவுகள் வெறுமனே வியக்கத்தக்கவை மற்றும் புரிந்து கொள்ள முடியாதவை. இது ஏப்ரல் 2025ம் ஆண்டு பாகிஸ்தானால் திட்டமிடப்பட்ட பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளது. நான்கு நாள் மோதலின்போது இந்தியா மீது பாகிஸ்தானின் ராணுவம் வெற்றி பெற்றதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்ப் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக 60 முறை கூறியுள்ளார். இது குறித்து பிரதமர் முற்றிலும் அமைதியாக இருக்கிறார். இப்போது அமெரிக்க சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரதமரும், வெளியுறவு துறை அமைச்சகமும் தங்களது ஆட்சேபனைகளையும் எதிர்ப்பையும் பதிவு செய்வார்களா? நமது ராஜதந்திரம் மற்றொரு கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.


