இந்தியா-சீனா உறவில் புதிய திருப்புமுனை; பனிப்போர் முடிந்து வசந்தம் மலருமா?: முன்னாள் ராணுவ தளபதி நம்பிக்கை
புதுடெல்லி: இந்தியா - சீனா இடையேயான உறவுகள் அரசியல், தூதரக மற்றும் ராணுவ மட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகளால் சரிசெய்யப்பட்டு வருவது அதிர்ஷ்டவசமானது என்று முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவனே நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 1962ம் ஆண்டு நடந்த இந்தியா - சீனா இடையிலான போருக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் தொடர்ச்சியான ஏற்றத்தாழ்வுகள் நிலவி வந்தன. இதன் உச்சக்கட்டமாக, 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த கொடூர மோதல்கள் இருநாட்டு உறவுகளிலும் மோசமான விரிசலை ஏற்படுத்தின.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமும் பெருமளவிலான படைகள் குவிக்கப்பட்டன. இத்தகைய சூழல் இரு நாடுகளுக்கு இடையிலான பொதுவான நலனுக்கு உகந்தது அல்ல என்றும், இதற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இருபெரும் ஆசிய நாடுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்பது உலகிற்கு நல்லதல்ல என்ற கருத்தும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் நிலவியது. இந்நிலையில் சமீப வாரங்களாக, இந்த உறவில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் விளைவாக, இருதரப்பு உறவுகளை நிலையானதாகவும், ஒத்துழைப்புடனும், முன்னோக்கியும் கொண்டு செல்ல முக்கிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவனே கூறுகையில், ‘எல்லையில் அமைதியை கூட்டாகப் பேணுவது, எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது, முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் நேரடி விமான சேவைகளை விரைவில் தொடங்குவது போன்றவை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய முயற்சிகள் இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தும். இந்தியாவின் இந்த நல்லெண்ணத்திற்கு சீனாவும் உரிய பதிலளிக்கும் என எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.