வாஷிங்டன்:அமெரிக்க அரசில் இந்திய நலன்களை பாதுகாக்கும் வகையில் பிரசார தூதராக எஸ்எச்டபிள்யு பார்ட்னர்ஸ் என்ற தகவல் தொடர்பு நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த நிறுவனத்துக்கு ரூ.15 கோடியை இந்திய தூதரகம் வழங்கி உள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் ஜேஸன் மில்லர் அமெரிக்க ஊடக துறையில் மிகவும் பிரபலமானவர். கடந்த 2016ல் நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்புக்கு ஆலோசகராக இருந்தார். 2024 தேர்தலிலும் டிரம்பின் மூத்த ஆலோசகராக பணியாற்றினார். ஜேஸன் மில்லர் நிறுவனத்துடன் கடந்த ஏப்ரலில் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியா மீது அமெரிக்கா 50 % வரி விதித்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே உறவில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை ஜேஸன் மில்லர் திடீரென சந்தித்துள்ளார். அது தொடர்பான படங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் டிரம்பை சந்தித்ததற்கான காரணம் எதுவும் குறிப்பிடவில்லை. அவர் பதிவிட்டுள்ளதாவது: வாஷிங்டன்னில் ஏராளமான நண்பர்கள் இருந்ததால் அருமையான வாரம். நிச்சயமாக உள்ளே வந்து அதிபரின் செயல்பாட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.