Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிபர் புதின் நாளை டெல்லி வரும் நிலையில் ராணுவ தளங்களை பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதி: ரஷ்ய நாடாளுமன்றத்தில் முக்கிய ஒப்பந்தம் நிறைவேறியது

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரு நாடுகளும் ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யா இடையே ராணுவ தளவாடங்களை பரஸ்பரம் பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பான ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி இரு நாட்டு அரசுகளாலும் கையெழுத்தானது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ அனுமதியை கோரி, கடந்த வாரம் ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார். உக்ரைன் போர் சூழலுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக நாளை (டிச. 4) இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும். இந்தச் சூழலில், இந்தியாவுடனான அந்த முக்கிய ஒப்பந்தத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ‘ஸ்டேட் டுமா’ நேற்று (டிச. 3) அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்து அதனை சட்டமாக்கியுள்ளது. அதிபர் புதின், இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாகவே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நாட்டு ராணுவமும் தங்களது நாட்டின் ராணுவ தளங்கள், துறைமுகங்கள் மற்றும் வான்வெளியை எவ்வித தடையுமின்றிப் பயன்படுத்திக் கொள்ள முடியும். போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புதல், கூட்டுப் பயிற்சிகள், பேரிடர் கால மீட்புப் பணிகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் போன்ற நேரங்களில் இந்த வசதிகளை இரு நாடுகளும் பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆர்க்டிக் பிராந்தியம் போன்ற மிக முக்கியமான பகுதிகளில் இந்தியக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் தடையின்றிச் செயல்படவும், செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தம் பெரிதும் உதவும். இந்தத் தீர்மானம் குறித்து ரஷ்ய நாடாளுமன்ற சபாநாயகர் வியாசஸ்லாவ் வோலோடின் பேசுகையில், ‘இந்தியாவுடனான உறவுகளை மேலும் வலுப்பதற்கான முக்கிய நடவடிக்கை’ என்று குறிப்பிட்டுள்ளார். அதிபர் புதினின் வருகையின் போது எஸ்-500 வான்பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு மற்றும் சுகோய்-57 போர் விமானம் வாங்குவது குறித்தும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ள நிலையில், தற்போது இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது இரு நாடுகளின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் நட்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவுடன் போரிட தயார்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்னெடுத்த அமைதிப் பேச்சுவார்த்தையில், ரஷ்யாவுக்குச் சாதகமான அம்சங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த வரைவுத் திட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாத பல நிபந்தனைகளைச் சேர்த்து, அமைதி முயற்சியை முழுமையாக முடக்கத் திட்டமிடுவதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். மாஸ்கோ வந்திருந்த அமெரிக்கத் தூதுவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு அவர் பேசும்போது, ‘ஐரோப்பாவுடன் போரிட நாங்கள் திட்டமிடவில்லை; ஆனால் அவர்கள் விரும்பினால், இப்போதே போரிட நாங்கள் தயார். ஐரோப்பாவுடனான போர் மிக விரைவாக முடிந்துவிடும், அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்த அந்த கண்டத்தில் ஆட்களே இருக்க மாட்டார்கள்’ என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.