சென்னை: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என செல்வப்பெருந்தகை கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று பகலில் ஐதராபாத் வழியாக, பீகார் புறப்பட்டு சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: பாட்னாவில் வாக்கு திருட்டு பேரணியை ராகுல்காந்தி தொடர்ந்து நடத்தி வந்தார். இதற்காக அஜெண்டாவில் விவாதிக்க இருப்பதால், அதில் பங்கேற்க பீகார் செல்கிறேன். கூட்டணியில் காங்கிரசுக்கு, கூடுதல் சீட்டுகள் வேண்டும் என்று கட்சியினர், தங்களுடைய ஆசையை சொல்கிறார்கள். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தாது.
தவெகவுடன் கூட்டணி குறித்து, காங்கிரஸ் கட்சி மறைமுகமாக எதுவும் பேசவில்லை. அவ்வாறு மறைமுகமாக பேசுவதற்கு என்ன தேவை இருக்கிறது? காங்கிரஸ் கட்சி 100 ஆண்டுகள் கடந்த வரலாற்றை கொண்ட கட்சி. எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் எந்த மாற்றமும் வராது. எடப்பாடி அமைத்துள்ள கூட்டணியில் தான் மாற்றம் வரும். விஜய் பிரசார கூட்டங்களில் பேசுவதை அனுமதிக்க வேண்டும். அப்போது தான் என்ன பேசுகிறார் என தெரியவரும். விஜய் கட்சிக்கு கூட்டம் நடத்த, பிரசாரம் செய்ய அரசு அனுமதி தர மறுப்பதாக கூறுகிறீர்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு மட்டும், அரசு உடனே அனுமதி தருகிறதா? ஒவ்வொரு போராட்டத்திற்கும் போராடி தான் அனுமதி வாங்க வேண்டியதாக இருக்கிறது. இந்த நான்கரை ஆண்டுகளில் எத்தனை முறை போராட்டம் நடத்தியபோது, என்னை கைது செய்து உள்ளார்கள். அதற்காக நாங்கள், காவல்துறை கைது செய்து விட்டது. அரசு நெருக்கடி தருகிறது என்று சொல்ல முடியுமா? அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சி எப்போதும், ஜனநாயகத்தின் பக்கம்தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.