Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் முழு கடனும் தள்ளுபடி: பஞ்சாப்பில் ராகுல் வாக்குறுதி

சண்டிகர்: ‘இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், விவசாயிகளின் மொத்த கடனும் ரத்து செய்யப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தரப்படும்’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். பஞ்சாப்பில் 13 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஜூன் 1ம் தேதி மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, லூதியானா காங்கிரஸ் வேட்பாளர் அமரிந்தர் சிங் ராஜா வர்ரிங்கை ஆதரித்து தகாவில் நேற்று ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் பஞ்சாப் பாடகரும், காங்கிரசை சேர்ந்தவருமான சித்து மூசேவாலாவின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: ஒன்றிய பாஜ அரசு தனது நண்பர்களான 22 தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கிறது.

ஆனால் ஏழை விவசாயிகளுக்கு எந்த நிவாரணத்தையும் தர தயங்குகிறது. மோடி நினைத்திருந்தால், ரூ.16 லட்சம் கோடியை வைத்து 24 ஆண்டுகளுக்கு விவசாயிகளின் கடனை ரத்து செய்திருக்கலாம். முந்தைய காங்கிரஸ் கூட்டணியின் பத்தாண்டு ஆட்சியில் ரூ.70 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடிக்கு தரப்பட்டுள்ளது. இந்த முறை இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், விவசாய கடன் தள்ளுபடிக்காக தனி அமைப்பு உருவாக்கப்படும். தேவைப்பட்டால், 2 முறை கூட நாங்கள் விவசாயிகளின் முழு கடனையும் தள்ளுபடி செய்வோம். வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவோம். பஞ்சாபில் போதைப்பொருள் பிரச்னை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருளுக்கு எதிராக பஞ்சாப் முழு அதிகாரத்துடனும், பலத்துடனும் போராட வேண்டும்.

தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியல் சட்டத்தை மாற்றிவிடுவோம், ரத்து செய்வோம் என்று இதற்கு முன் எந்த கட்சியும் சொல்லாத விஷயங்களை பாஜ தலைவர்கள் முன்வைக்கின்றனர். (அரசியலமைப்பு புத்தகத்தைய காட்டிய ராகுல்) இது வெறும் புத்தகம் மட்டுமல்ல, ஏழைகளின் குரல். இடஒதுக்கீடு, ஏழைகளின் உரிமைகள் என நீங்கள் எதைப் பெற்றாலும், அது அரசியலமைப்பில் இருந்து கிடைக்கிறது. அதை அழிக்க பாஜ விரும்புகிறது. அதை அனுமதிக்க மாட்டோம். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் அக்னி வீரர் திட்டத்தை ரத்து செய்வோம். இவ்வாறு ராகுல் பேசினார்.