புதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்டில், இன்னும் 58 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இந்தியா இன்று கடைசி நாளில் 2ம் இன்னிங்சை தொடர உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வித்தியாசத்தி்ல இமாலய வெற்றி பெற்ற நிலையில், கடந்த 10ம் தேதி 2வது டெஸ்ட், டெல்லியில் துவங்கியது. முதல் இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 518 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
அதன் பின், முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதனால், ஃபாலோ ஆனாக, 2வது இன்னிங்சை வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்தது. 3ம் நாள் ஆட்டத்தின் இறுதியில், வெஸ்ட் இண்டீசின் ஜான் கேம்ப்பெல் 87 ரன், ஷாய் ஹோப் 66 ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சாதித்தனர். அதனால், அன்றைய ஆட்டம், 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்னுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், 4ம் நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சை தொடர்ந்தது. சிறிது நேரத்தில் கேம்ப்பெல் 174 பந்துகளில் சதத்தை எட்டினார். ரவீந்திர ஜடேஜா வீசிய 64வது ஓவரில் கேம்ப்பெல் 115 ரன்னில் எல்பிடபிள்யு ஆனார். அவரைத் தொடர்ந்து சதம் விளாசிய ஷாய் ஹோப் (103), 84வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதன் பின், டெவின் இம்லாக் 12, கேப்டன் ரோஸ்டன் சேஸ் 40, காரி பியரி 0, ஜோமல் வாரிகன் 3, ஆண்டர்சன் பிலிப் 2 ரன்னில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இருப்பினும் கடைசி விக்கெட்டுக்கு இணை சேர்ந்த ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜேய்டன் சீல்ஸ் பொறுப்புடன் ஆடி அட்டகாசமாக ரன்களை சேர்த்து இந்திய வீரர்களின் பொறுமையை வெகுவாக சோதித்தனர். இந்த இணை 79 ரன்கள் சேர்த்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தில் ஜெய்டன் சீல்ஸ் (32 ரன்), வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.
அதனால், 118.5 ஓவரில் 390 ரன்னுடன் வெஸ்ட் இண்டீசின் 2ம் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்தியா தரப்பில் பும்ரா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட், முகம்மது சிராஜ் 2 விக்கெட்டுகளை பறித்தனர். அதையடுத்து, 121 ரன் இலக்குடன் இந்தியா களமிறங்கியது. துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 ரன்னில் அவுட்டாக, கே.எல்.ராகுல், சாய் சுதர்சன் இணை சேர்ந்து ஆடினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா, ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன் எடுத்திருந்தது. ராகுல் 25, சாய் சுதர்சன் 30 ரன்னுடன் களத்தில் இருந்தனர். வெற்றிக்கு இன்னும் 58 ரன்களே தேவைப்படும் நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டத்தை இந்தியா தொடர்கிறது.