Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவுடன் 3வது டெஸ்ட் இங்கிலாந்து நிதான ஆட்டம்

லார்ட்ஸ்: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் 1:1 என்ற சமநிலையில் நிற்க 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் பும்ரா, இங்கிலாந்து அணியில் ஜோஷ் டங்கேக்கு பதிலாக ஜோப்ரா ஆர்ச்சரும் உள்ளே வந்தனர். டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்ய தொடக்க ஆட்டக்காரர்களாக கிரவுலியும், பென் டக்கட்டும் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில் ஸ்கோர் 43 ரன் வந்த நிலையில் உணவு இடைவேளைக்கு முன் 14வது ஓவரை வீச வந்த நிதிஷ் குமார் ரெட்டி பந்தில் பென் டக்கட் 23 ரன்னில் கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அதே ஓவரின் கடைசி பந்தில் நிதிஷ் குமார் ரெட்டி, கிரவுலியை 18 ரன்னில் அவுட்டாக்கி அசத்தினார். பின்னர் ஓலி போப், ஜோ ரூட் ஜோடி மேலும் விக்கெட்டை கொடுக்காமல் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். டீ பிரேக்கிற்கு பின் ஓலி போப் 44 ரன்னுடன் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன் எடுத்து விளையாடி வருகிறது. ரூட் 55 ரன், ஹாரி புரூக் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இதற்கிடையே பும்ரா பந்துவீச்சை கீப்பிங் செய்து 2 முறை விரலில் காயமடைந்த ரிஷப் பண்ட், பெவிலியன் திரும்ப அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பணியை துருவ் ஜூரல் கவனித்தார்.

* லார்ட்ஸ் மியூசியத்தில் சச்சின் படம் திறப்பு

உலகில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானம் பாரம்பரியமிக்கது. உலகப் புகழ் பெற்ற இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட கிரிக்கெட் வீரர்கள் விரும்புவர். இங்கு சாதனை படைக்கும் வீரர்கள் பெயர், பெயர்ப் பலகையில் பொறிக்கப்படும். இங்கு எம்.சி.சி. மியூசியம் அமைந்துள்ளது. மேலும் கிரிக்கெட்டில் சாதனை படைத்தவர்களின் படங்களும் இங்கு இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் சச்சின் தெண்டுல்கரின் படம் மியூசியத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. தன்னுடைய படத்தின் முன் நின்று சச்சின் தெண்டுல்கர் நேற்று ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

* இந்த ஆண்டே எஸ்ஏ20

தென் ஆப்பிரிக்காவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் எஸ்ஸே 20 டி20 கிரிக்கெட் லீக் போட்டி வழக்கமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறும். முதல்முறையாக எஸ் ஏ 20 யின் நான்காவது சீசன் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி டிசம்பர் ஜனவரி மாதங்களில் நடைபெறும். முதல் ஆட்டம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் நடைபெறுவதால் இந்த ஆட்டம் பாக்சிங் ஆட்டமாக, முதல் முறையாக நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் எம்ஐ கேப்டவுன் -டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

* விம்பிள்டன் அரையிறுதியில் ஜோகோவிச்

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஃபிளவியோ கோபோலி ஆகியோர் மோதினர். அதில் ஜோகோவிச் 6-7(6-7), 6-2, 7-5, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப் பெற்று 14வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறார். அவற்றில் தொடர்ந்து 7வது முறையாக அரையிறுதியில் விளையாட இருக்கிறார். இன்று நடைபெறும் அந்த ஆட்டத்தில் உலகின் நெம்பர் ஒன் வீரர் இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிர்த்து களம் காண உள்ளார். இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெற்றார் தொடர்ந்து 7வது முறையாக விம்பிள்டன் பைனலில் விளையாடுவார். இருவரும் இதுவரை 9 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அவற்றில் 5ல் சின்னரும், 4ல் ஜோகோவிச்சும் வெற்றியை வசப்படுத்தி ்உள்ளனர். அவற்றில் கடைசி 4 ஆட்டங்களிலும் சின்னர்தான் வென்று இருக்கிறார். அதே நேரத்தில் விம்பிள்டன்னில் மோதிய 2 ஆட்டங்களிலும் ஜோகோவிச்தான் வெற்றி வாகை சூடியுள்ளார். விம்பிள்டன் அரையிறுதியில் 2வது முறையாக களம் காணும் சின்னர் இதுவரை பைனலுக்கு முன்னேறியதில்லை.