இந்தியாவில் 23 ஆண்டுகளில் 1 சதவீத பணக்காரர்களின் சொத்து 62% அதிகரித்தது: அபாய கட்டத்தை எட்டிய சமத்துவமின்மை
புதுடெல்லி: சர்வதேச சமத்துவமின்மையின் நிலை குறித்து ஆராய தென் ஆப்ரிக்கா தலைமையிலான ஜி20 அமைப்பு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இக்குழு வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலக அளவில் சமத்துவமின்மை அவசரநிலையை எட்டியிருக்கிறது. இது ஜனநாயக நிலைத்தன்மை, பொருளாதார மீள்தன்மை, பருவநிலை ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடிய அபாய கட்டமாகும். கடந்த 2000 முதல் 2024ம் ஆண்டு வரை உருவாக்கப்பட்ட செல்வத்தில் உலகளவில் முன்னணி வகிக்கும் 1 சதவீத பெரும் பணக்காரர்கள் 42 சதவீத செல்வத்தை பெற்றுள்ளனர். இதற்கு நேர்மாறாக, இப்பட்டியலில் பிற்பாதியில் இருக்கக் கூடிய, உலக மக்களில் பாதி பேர் வெறும் 1 சதவீத செல்வத்தை பெற்றுள்ளனர். இந்தியாவில் கடந்த 2000 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 1 சதவீத பெரும் பணக்காரர்களின் சொத்து 62 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுவே சீினாவில் 54 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் சமத்துவமின்மை அபாய கட்டத்தை எட்டி உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
