அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்பு; பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிப்பு: ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்
புதுடெல்லி: இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஐ.நா.வில் இந்தியா வாக்களித்திருப்பது உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ‘நியூயார்க் பிரகடன’ தீர்மானம், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டுவரப்பட்டது. ‘இரு நாடுகள் தீர்வு’ என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 142 நாடுகளும், எதிராக இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்த வாக்கெடுப்பின் மூலம், இறையாண்மையுள்ள, சுதந்திரமான பாலஸ்தீனத்திற்கு இந்தியா தனது நீண்டகால ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தீர்மானத்தின்படி, காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருதல், இறையாண்மையுள்ள பாலஸ்தீன அரசை நிறுவுதல், ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து பிணைக்கைதிகளை விடுவிக்கக் கோருதல், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் தனது குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஜூன் மாதம் காசா போர்நிறுத்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்திருந்த நிலையில், தற்போது விரிவான தீர்வுத் திட்டங்களுடன் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளது.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை சர்வதேச நாடுகள் வரவேற்றுள்ள ஆனால் இஸ்ரேலும் அமெரிக்காவும் இதனை பயனற்ற நாடகம் மற்றும் தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என கடுமையாக விமர்சித்துள்ளன. வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள ஐ.நா. உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்த வாக்கெடுப்பு நடந்துள்ள நிலையில், அந்த மாநாட்டில் பிரான்ஸ் உள்ளிட்ட மேலும் பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.