Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது: இரு நாட்டு பிரதிநிதிகள் முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியிருக்கிறது. டெல்லியில் அமெரிக்க பிரதிநிதிகள் நேற்று இந்திய தரப்புடன் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்காக இந்தியா பேச்சுவார்த்தையை தொடங்கியது. 5 கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்குள் இடைக்கால ஒப்பந்தம் செய்ய திட்டமிட்ட நிலையில், பரஸ்பர வரி 25 சதவீதமும், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக 25 சதவீதமும் என இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் 50% வரி விதித்தார். இதனால் இரு தரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டு, 6ம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த 50 சதவீத வரியால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்திருக்கும் நிலையில், டிரம்ப்-மோடி இடையே சமீபத்தில் சமரசம் ஏற்பட்டது. வர்த்தக பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிப்பதில் இனி எந்த சிரமும் இருக்காது என அதிபர் டிரம்ப் கூற, இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என பிரதமர் மோடி பதிலளித்தார். இதைத் தொடர்ந்து, மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தையை தொடங்க, அமெரிக்காவின் தலைமை வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் நேற்று முன்தினம் டெல்லி வந்தார்.

இந்நிலையில், அமெரிக்க பிரதிநிதி லிஞ்ச் மற்றும் இந்திய வர்த்தக அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ராஜேஷ் அகர்வால் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நேற்று நாள் முழுவதும் நடந்தது. இதில் முக்கிய பல விஷயங்கள் குறித்து இரு நாட்டு பிரதிநிதிகளும் ஆலோசனை நடத்தி உள்ளனர். குறிப்பாக, ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரியை நீக்கினால் மட்டுமே வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியும் என்பதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இது குறித்து அமெரிக்க பிரதிநிதியிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. எனவே, இந்த 25 சதவீத அபராத வரியை விலக்குவது குறித்து அமெரிக்கா முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* பேச்சுவார்த்தைக்கு இந்தியா வருகிறது

அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, நேற்று முன்தினம் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘‘வரிகளின் மகாராஜாவான இந்தியா பேச்சுவார்த்தைக்கு வருகிறது. பிரதமர் மோடி நல்ல ஆக்கப்பூர்வமாக ட்வீட் செய்தார். அதற்கு டிரம்பும் சாதகமான பதில் அளித்தார். அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வர்த்தகத்தை பொறுத்த வரை மற்ற அனைத்து நாட்டையும் விட இந்தியா எங்கள் மீது அதிக வரி போடுகிறது. மற்ற நாடுகளை நாங்கள் எவ்வாறு கையாள்கிறோமோ அதே போலத்தான் இந்தியாவையும் நடத்துகிறோம்’’ என கூறி உள்ளார்.