புதுடெல்லி: அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் ஒரு சோதனையாக மாறி விட்டது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், 2025 நவம்பரில் குவாட் உச்சி மாநாட்டை இந்தியா நடத்தும் என்று முன்பு சொல்லப்பட்ட காலம் இருந்தது.அது இப்போது நடக்கவில்லை. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முதல் நாடுகளில் இந்தியாவும் இருக்கும் என்று சொல்லப்பட்ட காலம் இருந்தது. அந்த ஒப்பந்தம் ஒரு சோதனையாக மாறியுள்ளது.அதே நேரத்தில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் குறைந்து இங்கு வாழ்வாதாரத்தை இழக்க வழிவகுக்கிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் குறித்த முதல் அறிவிப்பு டெல்லியில் இருந்து வரவில்லை, வாஷிங்டனில் இருந்து வந்தது. வர்த்தகத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுசக்தி மோதலை தடுத்ததாக டிரம்ப் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்துள்ளார். அதில், டிரம்ப் பேசுகையில், கட்டணங்களும், வர்த்தகங்களும் இல்லாவிட்டால் நான் ஒப்பந்தங்களை செய்ய முடியாது. இந்தியா- பாகிஸ்தான் போர் மிகவும் மோசமானதாக இருந்திருக்கும். நான் அவர்கள் இருவரிடமும், ’நீங்கள் விரைவாக ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கவில்லை என்றால், நீங்கள் அமெரிக்காவுடன் எந்த வியாபாரத்தையும் செய்ய மாட்டீர்கள்’ என்று சொல்லி போரை நிறுத்தினேன் என்று டிரம்ப் பேசியுள்ளார்.
 
 
 
   