டெல்லி: இந்தியாவில் சூரிய ஒளி இருக்கும் நேரம் கடந்த 30 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் நடத்திய ஆய்வில் அச்சுறுத்தும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடர்த்தியான மேகமூட்டம் அதிகமாக இருப்பது, ஏரோஸ்டல் எனப்படும் துகள்கள் காற்றில் அதிகளவில் கலப்பதால் சூரிய ஒளி நேரடியாக பூமியில் படுவது குறைவாக இருப்பது ஆகியவையே இந்நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.
1988ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை வட இந்தியாவின் 9 இடங்களில் உள்ள வானிலை மையம் தரவுகள் அடிப்படையில் இப்புள்ளி விவரம் தெரிய வந்திருக்கிறது. வட இந்தியாவில் ஆண்டுக்கு 13.1 மணி நேரமும், மேற்கு கடலோர பகுதியில் 8.6 மணி நேரமும் சூரிய ஒளி தென்படும் நேரம் குறைந்து இருப்பது தெரிய வந்திருக்கிறது. சென்னை, மசூலிப்பட்டினம், புவனேஸ்வர் ஆகிய கிழக்கு கடலோர பகுதிகளில் 4.9 மணி நேரம் சூரிய ஒளி வீச்சு குறைந்திருக்கிறது. இதனால் விவசாயம் முதல் சூரிய ஒளி மின் உற்பத்தி வரை பல வகையான பாதிப்புகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.