கொல்கத்தா: இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (14ம் தேதி) துவங்குகிறது. ஆறு ஆண்டுகளுக்கு பின் இங்கு டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக (0-3) இழந்தது. தற்போதைய தென் ஆப்ரிக்க அணியில் கேசவ் மஹாராஜ், சைமன் ஹார்மர், சேனுரன் முத்துசாமி என 3 ஸ்பின்னர்கள் உள்ளனர். இதனால் ஆடுகள விஷயத்தில் இந்திய அணி கவனமாக உள்ளது.
போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்து விட்ட நிலையில் டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈடன் கார்டன் மைதானம், இந்தியா, தென் ஆப்ரிக்க அணி வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அச்சமில்லாமல் போட்டியை காண வேண்டும் என்பதற்காக பல கட்ட சோதனைகளுக்கு பின் அனுமதிக்கப்படுவர். இரு முறை மெட்டல் டிடெக்டர் சோதனைகள் கடந்து தான் மைதானத்திற்குள் செல்ல முடியும். சந்தேகத்திற்குரிய பைகள், பொருள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் இருப்பர். சாதாரண உடை அணிந்த போலீசார் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பில் ஈடுபடுவர்.
* டாசில் சிறப்பம்சம்
கொல்கத்தா டெஸ்ட் போட்டிக்கான ‘டாசின்’ ஒரு பக்கம் மகாத்மா காந்தி, மறுபக்கம் நெல்சன் மண்டேலா படம் கொண்ட சிறப்பு தங்க காயின் பயன்படுத்தப்படும் என பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி தெரிவித்தார்.
