Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக 54 முறை கூறிய அதிபர் டிரம்ப்பை கட்டிப்பிடிக்க விரும்பாத பிரதமர் மோடி: காங். விமர்சனம்

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருவதற்கு பிரதமர் மோடியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஏற்பட்ட போரை தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். வர்த்தக அச்சுறுத்தல்கள் மற்றும் வரிகளை ஆயுதமாகப் பயன்படுத்தியே போரை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில், மூன்றாம் தரப்பின் தலையீட்டை ஒன்றிய அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் (டி.ஜி.எம்.ஓ) மட்டத்தில் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தையின் மூலமே போர் நிறுத்தம் எட்டப்பட்டது என்பதே இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக உள்ளது.  டோக்கியோவில் செவ்வாயன்று பேசிய அதிபர் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரின்போது 7 புதிய வகை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அது எந்த நாட்டுக்கு சொந்தமான விமானங்கள் என்று அவர் கூறவில்லை. இந்நிலையில் நேற்றும் ஜப்பானிலும், பின்னர் தென்கொரியாவிலும் அதிபர் டிரம்ப் போரை நிறுத்தியதாக கூறும் வீடியோ காட்சிகளை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அவர் தனது பதிவில், ‘இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் இதுவரை 54 முறை கூறியுள்ளார்.

அமெரிக்கா, கத்தார், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் இங்கிலாந்தில் அவர் இதனை கூறியுள்ளார். விமான பயணத்தின்போதும் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் நேற்று மாலை(நேற்று முன்தினம்) ஜப்பானில் இதனை சொல்லியிருக்கிறார். டெல்லியில் உள்ள அவரது நண்பர் (பிரதமர் மோடி இப்போது டிரம்பை கட்டிப்பிடிக்க விரும்பாததில் ஆச்சரியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

* மூன்றாவது முறையாக அதிபர்

ஜப்பானில் இருந்து தென்கொரியா செல்லும் வழியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில் , \\” நான் படித்ததன் அடிப்படையில் நான் மூன்றாவது முறையாக போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். இது மிகவும் மோசமானது. எங்களுக்கு ஒரு சிறந்த மக்கள் குழு உள்ளது என்பதை மட்டுமே நான் உங்களுக்கு சொல்ல முடியும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்\\” என்றார்.

அதிகாரத்தில் நீடிக்க முயற்சிக்கும் யோசனையை டிரம்ப் பலமுறை எழுப்பி இருக்கிறார். டிரம்ப் 2028 என்ற எழுதப்பட்ட தொப்பிகள் வெள்ளை மாளிகைக்கு வரும் எம்பிக்களுக்கும் மற்றவர்களுக்கும் நினைவு பரிசாக வழங்கப்பட்டு வருகின்றது. துணை அதிபராக போட்டியிட மாட்டேன் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

* இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்

தென்கொரியாவின் கியோங்ஜூவில் நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டின்போது பேசிய அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த மரியாதை மற்றும் அன்பு வைத்திருக்கிறேன். எங்களுக்கு ஒரு சிறந்த உறவு இருக்கிறது. இந்தியாவையும் பாகிஸ்தானையும் பார்த்தால் நான் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை செய்து வருகிறேன்\\” என்றார்.