வாரணாசி: இந்தியா-மொரீஷியஸ் இடையே கல்வி, மின்சாரம் , விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதம் மொரீஷியஸ் நாட்டுக்கு சென்று வந்தார். இந்நிலையில் மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் 8 நாள் அரசு முறை பயணமாக கடந்த 9ம் தேதி இந்தியா வந்தார். இந்நிலையில் மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலமை பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் நேற்று சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருநாட்டு உறவை வலுப்படுத்துவது, வர்த்தகத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது மொரீஷியஸ்க்கு இந்தியா 680மில்லியன் அமெரிக்க டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவித்தது. மேலும் கடல்சார் பாதுகாப்பு, கல்வி, மின்சாரம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கியமான துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் 7 ஒப்பந்தங்களில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
இந்த சந்திப்புக்கு பின் பிரதமர் மோடி அளித்த ஊடக அறிக்கையில், ‘‘இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய உறவு உள்ளது. இந்தியா, மொரீஷியசின் கனவு ஒன்று தான். சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான, நிலையான மற்றும் வளமான இந்தியப் பெருங்கடல் என்பது இந்தியாவும், மொரீஷியசும் பகிர்ந்து கொள்ளும் முன்னுரிமையாகும். இந்த சூழலில் மொரீஷியசின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் திறனை வலுப்படுத்துவதில் இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
மொரீஷியசில் யூபிஐ மற்றும் ரூபே அட்டைகள் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து உள்ளூர் கரன்சியில் இரு தரப்பு வர்த்தகத்தை செயல்படுத்துவதற்கு இந்தியாவும், மொரீஷியசும் இணைந்து செயல்படும்.சிறப்பு பொருளாதார தொகுப்பின் கீழ் மொரிஷீயஸ் துறைமுகம், விமான நிலையம் மற்றும் சாலைகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் புதிய பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை அமைத்தல் உள்ளி்ட 10 திட்டங்களை செயல்படுத்துவதற்கு இந்தியா உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.