இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் 25 ஆக குறைந்தது: மபி,சட்டீஸ்கர், உபியில் அதிகளவில் குழந்தை இறப்புகள் பதிவு
புதுடெல்லி: இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் சாதனை அளவான 25 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் மபி,சட்டீஸ்கர், உபியில் இறப்பு விகிதம் அதிகமாக பதிவாகியுள்ளது. இந்திய பதிவாளர் ஜெனரலின் 2023ம் ஆண்டு அறிக்கையின்படி நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் வரலாற்று சிறப்பு மிக்கதாக 25 ஆக குறைந்துள்ளது. 2013ல் இந்த விகிதம் 40 ஆக இருந்தது. இந்த அறிக்கை 37.5 % குறைந்ததை பிரதிபலிக்கிறது. ஒரு ஆண்டில் 1000 பிறப்புகளுக்கு எத்தனை குழந்தைகள் இறக்கிறார்கள் என்ற அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
2023 அறிக்கையின்படி, ஒரு வருடத்தில் ஒவ்வொரு 1000 பிறப்புகளில், 25 குழந்தைகள் இறக்கின்றன. இந்த எண்ணிக்கை 2013 ல் 40 ஆக இருந்தது. குழந்தை இறப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தால், நாட்டில் சுகாதார அணுகல் சிறப்பாக இருப்பதாக கருதப்படுகிறது.
2023 ம் ஆண்டு தரவுகளை அடிப்படையாக கொண்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 1971ல் குழந்தை இறப்பு விகிதம் 129 ஆக இருந்த நிலையில் தற்போது 80 % சரிவை கண்டுள்ளது. மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் உபியில் அதிகபட்ச இறப்பு விகிதம் 37 ஆகவும், மிகக் குறைந்த இறப்பு விகிதம் மணிப்பூரில்(3) பதிவாகியுள்ளது. 21 பெரிய மாநிலங்களில் 5 என்ற ஒற்றை இலக்க இறப்பு விகிதத்தை பதிவு செய்த ஒரே மாநிலம் கேரளா ஆகும். இது நாட்டில் மணிப்பூருக்குப் அடுத்த இரண்டாவது இடத்தைப் பிடித்தது.ஆனால் மபி,சட்டீஸ்கர், உபியில் இறப்பு விகிதம் அதிகமாக பதிவாகியுள்ளது.