இந்தியாவில் ‘ஹாலோவீன்’ கொண்டாட்டம் ‘பேய்’ வேடத்தில் ஆபீசை அலறவிட்ட பெண் ஊழியர்: இணையத்தில் வீடியோ வைரல்
புதுடெல்லி: அலுவலகத்தில் நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தில் பெண் ஒருவர் ‘மஞ்சுளிகா’ போல வேடமணிந்து வந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பிரம்மிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேற்கத்திய கலாசாரமான ‘ஹாலோவீன்’ கொண்டாட்டங்கள், தற்போது இந்திய பெருநகரங்களில் உள்ள அலுவலகங்களிலும் பிரபலமடைந்து வருகின்றன.
இந்த கொண்டாட்டத்தின்போது, ஊழியர்கள் தங்களுக்குப் பிடித்தமான பேய் அல்லது கற்பனைக் கதாபாத்திரங்கள் போல வேடமணிந்து வருவது வழக்கம். அந்த வகையில், சுஷ்மிதா என்ற பெண் ஒருவர், தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஹாலோவீன் விழாவுக்காக, பாலிவுட்டின் புகழ்பெற்ற ஒரு திரைப்படத்தில் வரும் மிரட்டலான ‘மஞ்சுளிகா’ கதாபாத்திரத்தைத் தேர்வு செய்துள்ளார்.
சுஷ்மிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், அவர் வெள்ளை மற்றும் சிவப்பு நிற பார்டர் கொண்ட புடவை, கலைந்த நீண்ட முடி மற்றும் திகிலூட்டும் ஒப்பனையுடன் அச்சு அசலாக மஞ்சுளிகாவாகவே அலுவலகத்திற்குள் நுழைகிறார். அந்த கதாபாத்திரத்தின் குரூர பார்வை மற்றும் உடல் மொழியை அப்படியே வெளிப்படுத்திய அவரது நடிப்பு, சக ஊழியர்களிடையே ஒரே நேரத்தில் சிரிப்பையும், கைதட்டல்களையும், பாராட்டுகளையும் பெற்றது.
‘ஒன்றுமில்லை, சும்மா அலுவலக ஹாலோவீன் விழாவிற்கு இந்தியப் பேய் வேடத்தில் சென்றேன்’ என்ற பகிரப்பட்ட இந்த வீடியோ, உடனடியாக இணையத்தில் வைரலானது. லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோவுக்கு, பயனர்கள் பலரும் சுஷ்மிதாவின் படைப்பாற்றலைப் பாராட்டி வருகின்றனர். வழக்கமான காட்டேரி, சூனியக்காரி வேடங்களுக்கு மத்தியில், இந்த மஞ்சுளிகா தோற்றம் தனித்து நின்று, இந்த ஆண்டின் சிறந்த ஹாலோவீன் உடை எனப் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

