Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் 5,755 பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 4 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் 5,755 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதற்கு, ஜேஎன்.1, என்பி.1.8.1, எல்எப்.7, எக்ஸ்எப்சி போன்ற ஒமிக்ரானின் புதிய துணை வகைகளே காரணமாகும். இந்த வகை தொற்றுகள் வேகமாகப் பரவும் தன்மை கொண்டிருந்தாலும், பெரும்பாலும் மிதமான அறிகுறிகளையே ஏற்படுத்துகின்றன.

உலக சுகாதார அமைப்பு இவற்றை ‘கண்காணிக்கப்படும் வகைகள்’ என்றே வகைப்படுத்தியுள்ளது; அதாவது, இவை இன்னும் ஆபத்தானதாக மாறவில்லை என்றாலும், எச்சரிக்கை அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக அழியவில்லை என்றாலும், அது முன்பு போல கணிக்க முடியாத அவசரநிலையாக இல்லாமல், காய்ச்சல் போன்று மீண்டும் மீண்டும் வரக்கூடிய நோயாக மாறியுள்ளது.

இந்நிலையில், இன்று ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் சிகிச்சை பெறும் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5,755 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மத்தியப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் புதியதாக உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 1,800க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ள நிலையில், அம்மாநிலம் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து டெல்லி, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. தலைநகர் டெல்லியில் மட்டும் புதிதாக 73 பேருக்குத் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அங்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 665 ஆக உள்ளது. இன்று காலை நிலவரப்படி, நாடு முழுவதும் 760 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.