டெல்லி: இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க விரும்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அதிபர் ட்ரம்ப் பதிவிட்டிருந்தார். அதில், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனது நண்பர் பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன். இரு பெரிய நாடுகளுக்கும் சாதகமான முடிவை எட்டுவதில் எந்த சிரமமும் இருக்காது என நான் உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பதிவை டேக் செய்து பிரதமர் மோடி பதில் தெரிவித்துள்ளார். அதில், அதிபர் டிரம்புடன் பேச நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்; இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் இருநாட்டு மக்களுக்கும் ஒளிமயமான, வளமான எதிர்காலத்தை பாதுகாக்க இணைந்து செயல்படுவோம்; இந்தியா- அமெரிக்க கூட்டாண்மையின் திறனை திறக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வழிவகுக்கும் என நம்பிக்கை.வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிக்க எங்கள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன என அவர் பதில் தெரிவித்தார்.