புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தொடர்ந்து 12வது முறையாக தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். நாட்டின் 79வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார். தொடர்ச்சியாக 12வது முறையாக கொடியேற்ற இருக்கிறார். நாட்டின் முதல் பிரதமர் நேரு டெல்லி செங்கோட்டையில் 17 முறை தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தி உள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக நேருவின் மகள் இந்திராகாந்தி மொத்தம் 16 முறை தேசிய கொடி ஏற்றினாலும், தொடர்ச்சியாக 11 முறைதான் தேசிய கொடி ஏற்றினார். தற்போது அந்த சாதனையை பிரதமர் மோடி முறியடித்து நேருக்கு அடுத்தபடியாக அதிக முறை, அதாவது 12 முறை தொடர்ச்சியாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பெயரை பெற உள்ளார். இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா டெல்லியில் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கும்.
இந்த விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இணையமைச்சர் சஞ்சய் சேட் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் வரவேற்கிறார்கள். பின்னர் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி விட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
அவரது உரையில் ஆபரேஷன் சிந்தூர், தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியாவுக்கு எதிரான நிலை உள்ளிட்டவைகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் உரையாற்ற உள்ளதால் டெல்லி செங்கோட்டை பகுதியில் 11,000 பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.
டெல்லி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். உயரமான கட்டிடங்களில் துப்பாக்கி சுடும் வீரர்கள், நகரம் முழுவதும் அதிகரித்த கேமரா கண்காணிப்பு மற்றும் 3,000 போக்குவரத்து போலீசார் உள்பட டெல்லி காவல்துறை, ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் பல அடுக்கு பாதுகாப்புடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லி முழுவதும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.