சென்னை: சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர சுதந்திர தின விழாவன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். தேநீர் விருந்தில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக,
விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு:
வழக்கம்போல மேதகு ஆளுநர் அவர்கள் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கும்படி விசிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளையில் வழக்கம்போல அவ்விழாவில் விசிக பங்கேற்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி புறக்கணிப்பு :
நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஏற்பாடு செய்துள்ள தேனீர் விருந்தில் பங்கேற்குமாறு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்தார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவ வேண்டிய ஆளுநர், அதற்கு தக்கபடி ஒரு நாளும் நடந்து கொள்ளவில்லை. கடந்த ஏப்ரல் 8 ம் தேதி ஆளுநரின் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான விளக்கம் அளித்து, வழங்கிய தீர்ப்பையும் மதிக்கவில்லை. அண்மையில் தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களிலும் கலை, இலக்கியம் உள்ளிட்ட படைப்புத் துறையிலும் தவிர்க்க முடியாத பங்களிப்பு செய்துள்ள கலைஞர் பெயரில் பல்கலைக் கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை கடைசி நாள் வரை, கிடப்பில் போட்டு வைத்து, இறுதியாக குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளார். பிறவி மச்சத்தை மாற்ற முடியாது என்பது போல், ஆளுநர் அத்துமீறல் தொடரும் நிலையில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, ஆளுநரின் தேனீர் விருந்தில் பங்கேற்காது, புறக்கணிக்கிறது. அவரது எதிர்மறை அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.