வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், கட்டவாக்கம் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஊத்துக்காடு கூட்டுச் சாலையில் இருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் சாலையை கட்டவாக்கம் மக்கள் கடக்க முயலும்போது நாள்தோறும் விபத்துக்குள்ளாகும் சூழல் அரங்கேறி வருகிறது. மேலும் சாலை கடக்கும் பகுதியில் நெடுஞ்சாலைதுறையினர் முன்னெச்சரிக்கை பலகை வைக்கவில்லை. சாலையை கடக்கும் பாதையில் வெள்ளை நிற கோடு போடப்பட்டிருக்கும். ஆனால் இப்பகுதியில் அப்படி எந்த வெள்ளை நிற கோடுகளும் இல்லை. இரவு நேரங்களில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களும் இல்லை.
இதனால் இந்த சாலையில் அதிவேகமாக வரும் பைக், கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சாலையை கடப்பவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நெடுஞ்சாலைத்துறை இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு இங்கு வேகத்தடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலையை கடக்கும் பகுதி என்பதை குறிப்பிடும் வகையில் எச்சரிக்கை பலகைகளும், பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களும் பொருத்தப்பட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


