*மாநில தகவல் ஆணையர் பேச்சு
ஊட்டி : பல்வேறு துறைகளிலிருந்து ஆர்டிஐக்கு அதிக அளவில் மனுக்கள் பெறப்படுகிறது என மாநில தகவல் ஆணையர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார். மாநில தகவல் ஆணையர்கள் பிரியகுமார், இளம்பரிதி மற்றும் நடேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இம்முகாமில் தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் ஆணையர் பிரியகுமார் பேசுகையில், இன்றைய காலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொது மக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு உள்ளது. முன்பு குறைவான அளவு மனுக்கள் மட்டுமே பெறப்பட்டது.
ஆனால் தற்போது பல்வேறு துறைகளிலிருந்து அதிக அளவில் மனுக்கள் பெறப்படுகிறது. துறை அலுவலர்கள் பராமரிப்பு பதிவேட்டில் மனு பெறப்பட்ட நாள், பதிவு செய்யப்பட்ட நாள், அதன் மீது தீர்வு கண்ட நாள், மனுதாரருக்கு தகவல் வழங்கிய நாள் ஆகியவற்றினை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.
மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள பொது தகவல் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் மனுக்கள் மீது பதில் அளிக்காத பொது தகவல் அலுவலர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், இச்சட்டத்தில் வழிவகை உள்ளது.
எனவே மனுவினை நன்றாக படித்து சரியான பதிலினை மனுதாரருக்கு 30 நாட்களுக்குள் தகவல் தர வேண்டும். தாங்கள் அளிக்கும் பதில்கள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும், என்றார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சதீஸ்குமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.