சென்னை: தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து இருப்பது வனவிலங்கு ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வனப்பகுதிகளை அதிகரிப்பதிலும், பசுமை காடுகளின் பரப்பளவை உயர்த்துவதிலும் காட்டு யானைகளின் பங்கு அபரிமிதமானது. இந்நிலையில், ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலாக தமிழ்நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுசூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
3261 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கர்நாடக வனத்துறையுடன் இணைந்து தமிழ்நாடு வனத்துறையினர் நடத்திய யானைகள் கணக்கெடுப்பு பணி தொடர்பான காட்சிகளையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டின் எல்லைக்குட்பட்ட வனப்பரப்பில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 3,063ல் இருந்து 3,170ஆக உயர்ந்துள்ளது. அதாவது சென்ற முறையை விட 170 யானைகள் அதிகரித்துள்ளன. இதில் சுமார் 76% யானைகள் நீலகிரியின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ளன.
எஞ்சியவை ஆனைமலை, மேற்கு தொடர்ச்சி மலை, அகஸ்திய மலை பகுதிகளில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் அதிகபட்சமாக 1,777 யானைகள் உள்ளன. அதேபோல் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1,345 யானைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எஞ்சியவை பல்வேறு அடர்ந்த காடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ள சுப்ரியா சாஹு, யானைகள் பாதுகாப்புக்காக அயராது உழைத்து வரும் வன ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.