தமிழ்நாட்டில் 18 இடங்கள், மகாராஷ்டிரா உட்பட நாடு முழுவதும் 150 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு: போலி ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பால் அதிரடி
புதுடெல்லி: பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரியை திரும்பப் பெற போலி ஆவணங்கள் சமர்ப்பித்தது தொடர்பாக நாடு முழுவதும் நேற்று 150 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியுள்ளது. வரி மூலமான வருவாயை ஈட்டுவதில் ஒன்றிய பாஜ அரசு பெரிய அளவில் முனைப்புக் காட்டி வருகிறது. தற்போது தனி நபர்கள் உள்ளிட்ட வருமான வரி செலுத்துவோர் ஆண்டு தோறும் ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். நடப்பு ஆண்டில் இதற்கான அவகாசம் செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டவர்கள், பிடித்தம் செய்யப்பட்ட வரியை உரிய ஆவணங்களை சமர்ப்பித்துத் திரும்பப் பெறலாம். சிலர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து வரிப் பிடித்தத்தை திரும்பப் பெறுவதால் இதனைக் கண்டறிய ஏஐ தொழில் நுட்பம் மூலம் வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது. இந்த வகையில், வரித்துறையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளை ஆய்வு செய்து, இதில் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்ட தனிநபர்கள் , நிறுவனங்களில் நேற்று ரெய்டு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் 150 இடங்களில் ரெய்டு நடந்தது.
தமிழகத்தில் திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை, சென்னை, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட 18 இடங்களில் வருமான வரி ரெய்டு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வருமான வரி நிபுணர்கள் மற்றும் இடைத்தரகர்கள் வரி செலுத்தும் பல ஆயிரக்கணக்கான மோசடி நபர்களுக்கு வருமான வரி திரும்பப் பெற போலி ஆவணங்கள் தாக்கல் செய்ய உதவியதாகவும் இருந்தது தெரிய வந்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள், 80-ஜிஜிசி பிரிவின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடைகள், 80-டி பிரிவின் கீழ் மருத்துவக் காப்பீட்டு, வாடகை ரசீது உட்பட பல்வேறு வருமான வரிச் சலுகைகளை பெற போலியான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். அரசு, தனியார் ஊழியர்கள் உள்ளிட்ட தனி நபர்கள், பாதுகாப்புப்படை அல்லது ஓய்வு பெற்ற ஊழியர்கள் உள்ளிட்டோர் மூலம்வாட்ஸ் ஆப் குழு அமைத்தும், போலியான இமெயில் உருவாக்கியும் மோசடிகள் அரங்கேறியுள்ளன. கடந்த 4 மாதங்களில் மட்டும் 40,000 பேர் ரிட்டன்களை திருத்தி அமைத்து ரூ.1,045 கோடியை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை வாபஸ் பெற்று விட்டதாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.