Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய வருமான வரி மசோதாவுக்கு எதிர்ப்பு; ஒடிசா பாஜக எம்பி தலைமையில் தேர்வுக் குழு அறிவிப்பு: தமிழ்நாட்டை சேர்ந்த 2 எம்பிக்கள் இடம்பெற்றனர்

புதுடெல்லி: புதிய வருமான வரி மசோதாவுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் ஒடிசா பாஜக எம்பி தலைமையில் தேர்வுக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 எம்பிக்கள் இடம்பெற்றனர். வருமான வரிச் சட்டங்களை சீர்திருத்துவதற்கான புதிய வருமான வரி மசோதா கடந்த புதன்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதாவை அறிமுகப்படுத்தினார். புதிய வருமான வரி மசோதாவின் பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது அதிருப்திக்குரிய அம்சங்கள் குறித்தும் பகிர்ந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, இந்த மசோதாவை மக்களவைத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறு சபாநாயகரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். அந்தக் குழு, புதிய வரி திட்டங்களை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் மாற்றங்களைச் செய்யும். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பாதியின் முதல் நாளான மார்ச் 10 அன்று அக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன்பின் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

புதிய வருமான வரியை அறிமுகம் செய்த பின்னர் அது குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்த பதிவில், ‘புதிய வருமான வரி மசோதா (2025) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று வரை திருத்தப்பட்ட சட்டத்தின் மொழியை எளிமையாக்குவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. நிதியமைச்சகத்தின் இணையதளத்தில் மசோதாவின் நகல் காணக் கிடைக்கும். எங்களின் எப்ஏக்யூ விளக்கங்கள் பொதுவாக எழும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த புதிய வருமான வரி மசோதாவை மறு ஆய்வு செய்வது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தேர்வுக் குழுவை அமைத்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவை பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘புதிய வருமான வரி மசோதாவை மறு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட 31 பேர் கொண்ட தேர்வுக் குழுவிற்கு, ஒடிஷா மாநிலம் கேந்திரபராவைச் சேர்ந்த பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமை தாங்குவார். இந்தக் குழுவில் பாஜக எம்பிக்கள் நிஷிகாந்த் துபே, ஜெகதீஷ் ஷெட்டர், சுதிர் குப்தா, அனில் பலுனி, ஷஷாங்க் மணி, நவீன் ஜிண்டால், அனுராக் சர்மா, காங்கிரஸ் எம்பிக்கள் தீபேந்தர் ஹூடா, பெஹானன், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சுப்ரியா சுலே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த தேர்வுக் குழு தனது அறிக்கையை அடுத்த அமர்வின் முதல் நாளில் மக்களவை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வருமான வரி மசோதா வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட தேர்வு குழுவில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 17 பேர் உட்பட 31 எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் பாஜகவைச் சேர்ந்த 14 எம்பிக்களும், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர். மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்பிக்கள், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த இருவர் மற்றும் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி), ஆர்எஸ்பி கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் உட்பட 13 எதிர்கட்சி எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த திமுக எம்பி கலாநிதி வீராசாமி, காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.