புதுடெல்லி: வருமான வரிச்சட்டம் 1961க்கு மாற்றாக, புதிய எளிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்யும் முயற்சியாக, புதிய வருமானவரிச் சட்ட மசோதா, கடந்த பிப்ரவரி 13ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் எவ்வித முக்கிய மாற்றங்களும் செய்யப்படவில்லை. மாறாக, சிக்கலான மொழிநடை தவிர்க்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் இடம் பெறும் சில வரிப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பிலுள்ள வருமான வரிச்சட்டத்தில் 5,12,535 வார்த்தைகள், 47 அத்தியாயங்கள், 819 பிரிவுகள் இடம் பெற்றுள்ளன.
புதிய மசோதாவில் 2,59,676, 23 அத்தியாயங்கள், 536 பிரிவுகள் என சுருக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை ஆய்வு செய்ய, பாஜ தலைவர் பைஜெயந்த் பாண்டா தலைமையில் 31 உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக்குழுவை, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நியமித்தார். புதிய மசோதாவை ஆய்வு செய்த குழுவின் கூட்டம் கடந்த 16ம் தேதி நடந்தது. இந்தக் குழு 285 பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இதன் அறிக்கை மக்களவையில் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.