நெல்லை: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியிலிருந்து சுமார் 30க்கும் மேற்பட்டோர் கீழக்கல்லூர் மற்றும் நடுக்கல்லூர் கிராமங்களுக்கு கடந்த 22ம்தேதி சென்றுள்ளனர். அவர்கள் கீழக்கல்லூர் பகுதியில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் வக்கீல் மணிகண்டன் மகாதேவன், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர் அங்குராஜ் உட்பட 3 பேர் வழிமறித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆலங்குளத்தைச் சேர்ந்த டேவிட் நிர்மல்துரை, கடந்த 22ம்தேதி சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், நான் வக்கீலாக உள்ளேன். கிறிஸ்தவ சபைகளில் பிரசங்கம் செய்து வருகிறேன்.
பட்டன்கல்லூரைச் சேர்ந்த சிவபாக்கியத்தின் உறவினருக்காக கீழக்கல்லூரில் ஜெபம் செய்யச் சென்றபோது, எங்களை வழிமறித்த மூவர், ‘இந்த ஊருக்குள் ஜெபம் செய்ய வந்தால் வெட்டிக் கொன்று விடுவோம்’ என கொலை மிரட்டல் விடுத்தனர். வலுக்கட்டாயமாக நெற்றியில் குங்குமம் பூசினர் என தெரிவித்து இருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், வக்கீல் மணிகண்டன் மகாதேவன், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவின் அலுவலக உதவியாளர் அங்குராஜ் மற்றும் அவரது சகோதரரான சங்கர் ஆகிய 3 பேர் மீது இந்திய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் 126(2) (மத அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்), 299 (கொலை மிரட்டல்), மற்றும் 351(2) (கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல்) ஆகிய 3 பிரிவின் கீழ் சுத்தமல்லி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.