புதுடெல்லி: கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை செப். 29ம் தேதி அமைத்தார்.
இக்குழுவில் எம்பிக்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுவினர், விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டதுடன், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், உள்ளூர் மக்களையும் சந்தித்துப் பேசினர். தங்களது ஆய்வை முடித்துக்கொண்ட இக்குழு, மாவட்ட அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக சில கேள்விகளை எழுப்பி, அவற்றிற்குப் பதிலளிக்கக் கோரியிருந்தது. இந்நிலையில், தனது முழுமையான விசாரணை அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிடம் இக்குழு தற்போது சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில், ‘இந்த விபத்து, நிர்வாக அலட்சியத்தால் நிகழ்ந்தது; தடுக்கப்பட்டிருக்க வேண்டிய பேரழிவு’ என்று கூறியுள்ளது. மேலும், 3,000 பேர் மட்டுமே கூடக்கூடிய இடத்தில் 30,000 பேர் வரை கூடியது, கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்தது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லாதது, விஜய் வந்தபோது ஏற்பட்ட மின்தடை மற்றும் கூட்டம் குறித்து உளவுத்துறையின் கணிப்பு தோல்வியடைந்தது போன்ற விசயங்களுடன், உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் இக்குழு அறிக்கையில் வலியுறுத்தி உள்ளது.