Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊக்கம் அளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்

*மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

கடலூர் : ஊக்கம் அளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், என ஆட்சியர் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்முனைவோர் ஆற்றலை உருவாக்கிடும் வகையில் நிறைந்தது மனம் திட்டத்தில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற கிள்ளை அரசு மேல்நிலை பள்ளி மாணவிகள், வழிகாட்டி ஆசிரியர்களை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் யூனிசெப் நிறுவனத்துடன் இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இடையே புதுமை மற்றும் தொழில் முனைவோர் ஆற்றலை வளர்க்க ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்திடும் வகையில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருநாள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இக்கருத்தரங்கில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் மாணவர்களின் படைப்பு திறனை சோதித்து அதில் சிறந்த படைப்பாளர்களை கண்டறிந்து, மாணவர்கள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது. மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு 2 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களின் கண்டுபிடிப்பிற்கு ஆகும் செலவிற்காக அதிகபட்சமாக ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது.

பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 12 குழுக்கள் பங்கேற்புடன் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 குழுக்கள் சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த கிள்ளை அரசு மேல்நிலை பள்ளி மாணவிகளான சுசீதா, ஓவியா, சங்கரி, சுவாதி மற்றும் லேகாஸ்ரீ ஆகியோர் ஆசிரியை கவிதா வழிகாட்டுதலின்படி இயற்கை திண்ம எரிபொருள் என்ற கண்டுபிடிப்புக்காக இரண்டாம் பரிசு பெற்றமைக்கு ரூ.50,000 காசோலை, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.

அரசின் வாயிலாக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மட்டுமன்றி அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிட மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும், என்றார்.