*சிறப்பு முகாமில் இபிஎப் மண்டல ஆணையர் தகவல்
நாகர்கோவில் : வருங்கால வைப்பு நிதி நாகர்கோவில் மண்டல அலுவலகத்தின் சிறப்பு முகாம் நாகர்கோவில் சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரியில் நடந்தது. ‘பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா’ பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் முகாம் நடந்தது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன நாகர்கோவில் மண்டல ஆணையர் சுப்பிரமணி புதிதாக பணியில் சேரும் ஊழியர்களுக்கான பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் நன்மைகள் குறித்து விரிவான விளக்கவுரை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ஒன்றிய அரசு ‘பிரதான் மந்திரி விக்ஷித் பாரத் ரோஜ்கார் யோஜனா’ எனும் திட்டத்தை அறிவித்துள்ளது. 2025 ஆகஸ்ட் 1 முதல் 2027 ஜூலை 31 வரை செயல்படும் இந்தத் திட்டம் மூலம் 3.5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.99,446 கோடி நிதியுடன் அமல்படுத்தப்படும் இந்த திட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. பகுதி ஏ-யில் முதல்முறையாக தொழிலில் சேரும் பணியாளர்களுக்கு இபிஎப் சம்பள அடிப்படையில் ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
பகுதி பி-யில் புதிய பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு மாதம் ₹3,000 வரை ஊக்கதொகை வழங்கப்படும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இது பெரிய உதவியாக அமையும்.
திட்டத்தின் முக்கிய நோக்கம் வேலைவாய்ப்பை உத்தியோக பூர்வமாக்கி சமூக பாதுகாப்பு வலையமைப்பை விரிவுபடுத்துவதாகும். மேலும் நிதி அறிவு பயிற்சிகள், தொழில்நுட்ப பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் முயற்சியும் இதன் ஒரு பகுதியாகும்.
இந்தத் திட்டம் மூலம் இந்தியா 2047க்குள் ‘விக்ஷித் பாரத்’ என்ற முழுமையான முன்னேற்ற நாடாக உருவாகும் என்ற நம்பிக்கையுடன் அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.