Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.173 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.173 கோடி செலவிலான மருத்துவக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தும், ரூ.20.15 கோடியில் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். கடந்த 2021-22ம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையில், வேலுார் மாவட்டம் காட்பாடியில் 60 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, காட்பாடியில் ரூ.14.30 கோடி செலவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதுபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.173.81 கோடி செலவிலான மருத்துவக் கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, ரூ.20.15 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் மருந்துக் கட்டுப்பாடு இயக்கத்திற்கு ரூ.14 கோடியே 85 லட்சம் தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் - வாலாஜாபாத் வட்டம், ஊத்துக்காட்டில் ரூ.75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உதவி மருந்துக் கட்டுப்பாடு இயக்குநர் அலுவலகக் கட்டிடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் சார்பில் மொத்தம் ரூ.6 கோடியே 22 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் சார்பில் சென்னை - அரும்பாக்கம், அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைக் கட்டிடம் மற்றும் சென்னை - அரும்பாக்கம், அரசு யுனானி மருத்துவக் கல்லூரியை மேம்படுத்திட புதிய கட்டிடம் என மொத்தம் ரூ.20 கோடியே 15 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களுக்கு முதல்வர் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார், மருந்து கட்டுப்பாடு இயக்குநர் (பொறுப்பு) லால்வேனா, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையர் எம்.விஜயலட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.