Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆவின் நிறுவனத்தின் ரூ43.61 கோடியிலான முடிவுற்ற திட்ட பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: திமுக அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை ஆவின் நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக ரூ.94.41 கோடி செலவில் புதிய பால் பதப்படுத்தும் மற்றும் பால் பாக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலைகள், புதிய ஐஸ்கீரீம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சேமிப்புக் கிடங்குகள், ஆய்வுக் கூடங்கள், பால் கொள்முதல் பிரிவுக் கட்டடங்கள், நிர்வாக அலுவலகக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பால் நுகர்வோர்களுக்கு தரமான பால் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை ஏற்படுத்தும் விதமாக கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டியில் ரூ.2 கோடியே 30 லட்சம் செலவில் நாளொன்றுக்கு 50,000 லிட்டர் பால் உற்பத்தித் திறன் கொண்ட பால் பண்ணை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்காலில் ரூ.2 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 50,000 லிட்டர் பால் உற்பத்தித் திறன் கொண்ட பால் பண்ணை,

நுகர்வோர்களுக்கு தரமான தயிர் மற்றும் மோர் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை ஏற்படுத்தும் விதமாக திருவள்ளுர் மாவட்டம், காக்களூர் பால் பண்ணையில் ரூ.3 கோடியே 57 லட்சம் செலவில் நாளொன்றுக்கு 5,000 லிட்டர் திறன் கொண்ட தயிர் மற்றும் மோர் தயாரிக்கும் ஆலை, திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில் ரூ.1 கோடியே 89 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நோய்க் கிருமிகளை கண்டறியும் மேம்படுத்தப்பட்ட ஆய்வகம் என மொத்தம் ரூ.10 கோடியே 61 லட்சம் செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதேபோன்று பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளின் கலப்புத் தீவன தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட கால்நடை தீவன ஆலைக்கு தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ம.பொடையூர் கிராமத்தில் 6.77 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள இந்த தீவன தொழிற்சாலையால் இப்பகுதியைச் சார்ந்த மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், கடலூர், விழுப்புரம் மற்றும் அருகில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் கறவைமாடுகளுக்கு தரமான கலப்புத் தீவனம் கிடைக்கப் பெறும்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.காந்தி, சி.வி. கணேசன், மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், பால்பண்ணை மேம்பாட்டு துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் வினீத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.