சேந்தமங்கலம்: கொல்லிமலை அருகே, மருமகளுடனான தகாத உறவை கைவிடும்படி கூறிய விவசாயியை, உறவினர் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் சேலூர்நாடு ஊராட்சி பள்ளக்குழிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கசாப்பு செல்வராஜ் (55). இவரது மகன் விஜயகுமார். இவர்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். செல்வராஜ் வீட்டிற்கு, அவரது பெரியப்பா மகன் காசி துரைசாமி (48) அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
அப்போது, விஜயகுமாரின் மனைவி சந்திராவுக்கும், காசி துரைசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதை விஜயகுமார் அறிந்து தந்தை செல்வராஜிடம் தெரிவித்துள்ளார். மகனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த செல்வராஜ், காசி துரைசாமியை கண்டித்துள்ளார். தனது மருமகளுடன் தகாத உறவை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால், அவர் உறவை தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, செல்வராஜ் பள்ளக்குழிப்பட்டி அருகே குழிக்காடு டிரான்ஸ்பார்மர் அருகே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, போதையில் அந்த பக்கமாக வந்த காசி துரைசாமியை அழைத்து, மருமகளுடன் வைத்துள்ள தகாத உறவை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், கைகலப்பாக மாறியது.
அப்போது, காசி துரைசாமி அங்கிருந்த விறகு கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்கு பதிந்து காசி துரைசாமியை கைது செய்தனர். இவரது மனைவி குடும்பத் தகராறில் பிரிந்து சென்று விட்டார். தனியாக வசித்து வந்த காசி துரைசாமி, அண்ணன் என்ற முறையில் அடிக்கடி செல்வராஜ் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுள்ளார். அப்போது, சந்திராவுடன் ஏற்பட்ட பழக்கம், செல்வராஜ் கொலையில் முடிந்துள்ளது.